தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இனிமேல் அரசு சொத்தை வாடகைக்கு எடுக்குமுன் பிரகடனம் வெளியிட வேண்டும்’

3 mins read
புதிய நிபந்தனை நடப்பிற்கு வருகிறது
0537fd21-5478-4cfd-8d9a-5cf9b5f8a8a5
அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்துக்கொண்ட ரிடவ்ட் ரோடு பங்களாக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 
multi-img1 of 2

அரசாங்கச் சொத்துகளின் வாடகை, மதிப்பீட்டு விவகாரங்களைத் தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருக்கும் அரசாங்க ஊழியர்கள், தாங்கள் வேலை பார்க்கும் அரசு அமைப்புகள் நிர்வகிக்கும் அத்தகைய சொத்துகளை வாடகைக்கு எடுப்பதற்கு முன்னதாக இனிமேல் பிரகடனம் ஒன்றை வெளியிட வேண்டும்.

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் (படம்) திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார். தரப்படுத்தப்பட்ட பிரகடன நிபந்தனையை அரசாங்கச் சேவைப் பிரிவு நடைமுறைப்படுத்தும்.

அது, குத்தகை, மதிப்பீட்டு விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ள அல்லது அத்தகைய தகவல்களை எட்டக் கூடிய நிலையில் உள்ள குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு உரியதாக இருக்கும் என்று திரு டியோ தெரிவித்தார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஜூரோங் நகராண்மைக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் நில ஆணையம் போன்ற ஆணை பெற்ற அமைப்புகளோடும் ஏற்புடைய அமைச்சுகளோடும் சேர்ந்து இதன் தொடர்பில் அரசாங்கச் சேவைப் பிரிவு செயல்படும்.

அனுகூலமான தகவல்களை எட்டக்கூடிய அல்லது இடம்பெறவிருக்கின்ற முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அல்லது இரண்டு நிலைகளிலும் இருக்கின்ற இந்த அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள், தாங்கள் வேலை பார்க்கின்ற அரசாங்க அமைப்புகள் நிர்வகிக்கின்ற சொத்துகளை வாடகைக்கு எடுப்பதற்கு முன்னதாக பிரகடனம் ஒன்றை வெளியிட வேண்டும்.

தாங்கள் அரசாங்கத் சொத்தை வாடகைக்கு எடுப்பதால் தவறான முறையில் தங்களுக்கு அனுகூலம் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கைகளைத் தாங்கள் எடுத்து இருப்பதாக அவர்கள் பிரகடனப்படுத்த வேண்டும்.

அத்தகைய சொத்துகளில் வணிக, குடியிருப்பு, உணவங்காடிக் கடைகள் எல்லாம் அடங்கும்.

அமைச்சர்கள், மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான சொத்து பரிவர்த்தனைகளில் தேவைப்படக்கூடிய பிரகடனங்களைப் பிரதமர் மேற்பார்வையிடுவார் என்றும் திரு டியோ குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சர் கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்தது தொடர்பாக வெளியான அறிக்கையைத் தொடர்ந்து அதன் தொடர்பில் திரு டியோநாடாளுமன்றத்தில் பேசினார்.

அந்த பங்களாக்களை அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்ததில் ஊழல் அல்லது குற்றச்செயல்கள் ஏதேனும் உள்ளதா என்பதைப் புலன்விசாரணை நடத்தி கண்டுபிடிக்கும்படி ஊழல் ஒழிப்பு புலன்விசாரணைப் பிரிவுக்குப் பிரதமர் உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தை மேற்பார்வையிடும் பொறுப்பு மூத்த அமைச்சர் டியோவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஊழல் ஒழிப்பு புலன்விசாரணைப் பிரிவு நடத்திய புலன்விசாரணை சுதந்திரமாக நடந்தது. அந்த அமைப்பு தனது முடிவுகளை அமைச்சர்கள் யாரிடத்திலும் தெரிவிக்காமல் நேரடியாக பிரதமரிடம் தாக்கல் செய்தது என்பதை திரு டியோ நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவையில் நீண்டகாலமாக இடம்பெற்று இருக்கும் இரண்டு அமைச்சர்களிடம் புலன்விசாரணை நடத்தும்படி ஊழல் ஒழிப்பு புலன்விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட பிரதமர் தயங்கவில்லை.

இது, இத்தகைய விவகாரங்களை அரசாங்கம் எந்த அளவுக்குக் கடுமையானதாக கருதுகிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக திரு டியோ குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் நிர்வாக முறையில் ஊழலற்ற நிலை மிக முக்கியமான, மதிப்புமிக்க ஒன்றாக இருக்கிறது என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.

புலன்விசாரணை ஒருபுறம் இருக்க, வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த இரண்டு பங்களாக்கள் தொடர்பான நிர்வாக நடைமுறைகளையும் கொள்கைகளையும் பற்றி விரிவான விளக்கங்களைத் தெரியப்படுத்தும்படி திரு டியோ சட்ட அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.

அந்த பங்களாக்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விவகாரத்தில் அமைச்சர்களுக்கு அனுகூலம் ஏதாவது கிடைத்து இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய உறுப்பினர்களுக்குப் பதிலளித்த திரு டியோ, அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்பதையே தமது மறுபரிசீலனைகள் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்