ரிடவ்ட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்த அமைச்சர்கள் பிரத்தியேக தகவல்கள் மூலம் அல்லது அனுகூலமான வாடகை மூலம் பலனடைந்து இருக்கிறார்களா என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் உறுப்பினர்களுக்குப் பதிலளித்துப் பேசினார்.
புலன்விசாரணை அறிக்கையில் முன்பு தெரிவிக்கப்படாத பல தகவல்களையும் அப்போது திரு டியோ வெளியிட்டார்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், எண் 26 ரிடவ்ட் ரோடு பங்களாவை வாடகைக்கு எடுத்தபோது, அவருடைய முகவர் தெரிவித்த ஆலோசனையின் பேரில் $25,000 வாடகை கொடுக்க முன்வந்தார்.
அந்தப் பங்களாவிற்குப் பக்கத்தில் இருக்கும் பங்களாக்களுக்கான வாடகைக் கட்டணத்தைவிட தான் குறைவாக வாடகை செலுத்தவில்லை என்பதை அந்தச் சொத்து முகவர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அவரிடம் கேட்டுக்கொண்டார்.
பக்கத்தில் உள்ள ஒரு பங்களா $26,000 வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சிங்கப்பூர் நில ஆணையம் $26,500 வாடகையை உத்தேசித்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிறகு ஆணையத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்தப் பங்களாவிற்குப் பக்கத்தில் புற்கள், மரங்கள் மண்டியிருந்த ஒரு நிலப்பகுதி, எண் 26 ரிடவ்ட் ரோடு சொத்து எல்லைக்குள் உட்படுத்தப்பட்டது.
அதை நிர்வகிக்கும் பொறுப்பு வாடகைதாரருக்கு என்றும் முடிவானது.
தொடர்புடைய செய்திகள்
அந்த நிலத்தைச் சுத்தப்படுத்தி வேலி அடைப்பதற்கான செலவை வாடகைதாரரிடம் இருந்து பெற ஆணையம் விரும்பியது.
அந்தச் சொத்தில் வாடகைக்கு இருக்கும் காலம் வரை வாடகைதாரர் மாதம் $2,000 கொடுக்க வேண்டும் என்று ஆணையத்தின் குத்தகைப் பிரிவு கணக்கிட்டது.
இடம் விரிவுபடுத்தப்பட்டதால் வழிகாட்டி வாடகை மீது தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கண்டறியும்படி ஆணையத்தின் மதிப்பீட்டாளரை அதன் குத்தகைப் பிரிவு கேட்டுக்கொண்டது.
அந்த மதிப்பீட்டாளர் ஊழல் ஒழிப்பு புலன்விசாரணைடப பிரிவிடம் சாட்சியம் அளித்தபோது, 23,164 சதுர மீட்டர் பரப்பளவுடன் கூடிய பெரிய இடத்திற்கான வழிகாட்டி வாடகை $26,500 இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நிலத்தை ஒழுங்குபடுத்துவதற்கான செலவுகளை வாடகைதாரர் செலுத்திவிடும்பட்சத்தில் வழிகாட்டி வாடகை $24,500 ஆக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவை அனைத்தும் தொடங்கி முடியும் வரை அந்த மதிப்பீட்டாளருக்கு வாடகைதாரர் யார் என்பதே தெரியாது.
ஊடகத்தில் தகவல் வெளியான பிறகுதான் வாடகைதாரர் அமைச்சர் சண்முகம் என்பது அந்த மதிப்பீட்டாளருக்கு தெரியவந்தது.
அதோடு மட்டுமன்றி, வாடகைதாரருடன் ஆணையத்தின் குத்தகைப் பிரிவு நடத்திய வாடகை தொகை பற்றியும் அந்த மதிப்பீட்டாளருக்குத் தெரியாது என்று திரு டியோ மன்றத்தில் தெரிவித்தார்.
ரிடவ்ட் ரோட்டில் உள்ள அந்த இரண்டு பங்களாக்களைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் ஆன செலவு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த திரு டியோ, எண் 26 ரிடவ்ட் ரோடு பங்களாவிற்கு மொத்த செலவு $515,400 என்றார்.
எண் 31 ரிடவ்ட் ரோடு பங்களாவுக்கு ஆன செலவு $570,500 என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திலும் தேசிய அளவிலும் உயர்தர நேர்மையை நிலைநாட்டி வர எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த விவகாரம் வெளிப்படுத்திக் காட்டுவதாக திரு டியோ குறிப்பிட்டார்.