தனியார் வீட்டு விலை காலாண்டு அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் முதல்முறை சரிவு

தனியார் வீட்டு விலை காலாண்டு அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் முதல்முறை சரிவு

2 mins read
45488e84-d780-4baa-b91b-ddc1b2815d1a
Generic private properties around Orchard area. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் தனியார் வீட்டு விலைகள் 0.4 விழுக்காடு குறைந்தது. ஆண்டின் முதலாம் காலாண்டில் வீட்டு விலைகள் 3.3 விழுக்காடு அதிகரித்து இருந்தது.

2020 முதலாம் காலாண்டுக்குப் பிறகு தனியார் வீட்டு விலை சரிந்து இருப்பது இதுவே முதன்முறை. நகர மறுசீரமைப்பு ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட முன்னோட்ட மதிப்பீட்டில் இது தெரியவந்துள்ளது.

பல்வேறு சுற்று சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள், வட்டி விகித அதிகரிப்பு, பொருளியல் கண்ணோட்டம் வலுவிழப்பு ஆகியவற்றால் தனியார் வீட்டு விலைகள் கடந்த காலாண்டில் குறைந்தது.

கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்புநோக்க, ஆண்டு அடிப்படையில் வீட்டு விலை 7.2 விழுக்காடு கூடியது. 2021 இரண்டாம் காலாண்டில் பதிவான 7.1 விழுக்காடு விலை ஏற்றத்துக்குப் பிறகு பதிவாகியுள்ள ஆகச்சிறிய விலையேற்றம் இது.

காலாண்டு அடிப்படையில் கடந்த காலாண்டில் பரிவர்த்தனை விகிதம் 16 விழுக்காடு உயர்ந்து 4,762 வீடுகள் விற்பனையாகின. விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்குக் காரணம்.

ஆனால், கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்புநோக்க, ஆண்டு அடிப்படையில் வீட்டு விற்பனை 30 விழுக்காடு சரிந்தது.

இதுகுறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திங்கள்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “சொத்துச் சந்தையில் வீட்டு விலைகள் மட்டுப்படுவதற்கான அறிகுறிகளை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்,” என்றார்.

2021 டிசம்பருக்குப் பிறகு பல்வேறு சுற்று சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, காலாண்டு அடிப்படையில் தனியார் வீட்டு விலைகள் குறைந்ததை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்