தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாரன்ஸ் வோங் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார்

2 mins read
a40abf37-f887-410d-aa83-3edeacc9d710
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ டைம்ஸ்

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் வகித்து வந்த சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) மற்றும் ஜிஐசி எனப்படும் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் குழு ஒன்று ஆகியவற்றின் தலைமைத்துவப் பொறுப்புகளை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் ஏற்கிறார்.

திரு வோங் ஜூலை 8ஆம் தேதி இப்பதவிகளை ஏற்பார். 2026ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை இத்தலைமைப் பொறுப்புகளில் இருப்பார் என்று நாணய ஆணையம் திங்கட்கிழமை அறிவித்தது. 2021 ஜூன் முதல் மத்திய வங்கியின் துணைத் தலைவராக இருந்து வரும் திரு வோங், 2011 ஜூன் முதல் 2016 ஆகஸ்ட் வரை அந்நிறுவனத்தின் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக இருக்கும் திரு தர்மன், 2011 மே முதல் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் திரு தர்மன் ஜூலை 8ஆம் தேதி அப்பதவியிலிருந்து விலகுகிறார்.

நாணய ஆணையத்தின் துணைத் தலைவராக வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் ஜூலை 8ஆம் தேதி முதல் 2026 மே 31ஆம் தேதி வரை பதவி வகிப்பார்.

மற்றோர் அறிக்கையில், திரு வோங் ஜூலை 7ஆம் தேதி முதல் தனது முதலீட்டு உத்திகள் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று ஜிஐசி திங்களன்று அறிவித்தது. ஜிஐசியின் துணைத் தலைவர், குழுவின் தலைவர் பதவிகளிலிருந்து திரு தர்மன் விலகுவதைத் தொடர்ந்து இப்புதிய நியமனங்களை ஜிஐசி அறிவித்துள்ளது.

திரு வோங் 2018 நவம்பர் முதல் ஜிஐசியின் இயக்குநர் சபைத் தலைவராகவும், 2017 ஆகஸ்ட் முதல் முதலீட்டு உத்திகள் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

திரு தர்மன் 2019 முதல் ஜிஐசியின் துணைத் தலைவராகவும், 2011 முதல் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

இந்தக் குழு ஜிஐசி இயக்குநர் சபை அதன் நிர்வாகத்தின் சொத்து ஒதுக்கீட்டு பரிந்துரைகள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் பரிந்துரைகளை மதிப்பீடு செய்வதில் உதவுகிறது.

திரு தர்மனுக்குப் பிறகு அதன் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்பவர் பற்றி ஜிஐசி அறிவிக்கவில்லை.

திரு தர்மன் ஜூன் 8ஆம் தேதி தனது அனைத்து அரசாங்கப் பதவிகளில் இருந்தும் விலகுவதாகவும் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப்பின் ஆறு ஆண்டுகால பதவிக்காலம் செப்டம்பர் 13ஆம் தேதி முடிவடைவதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

குறிப்புச் சொற்கள்