இருபது வயது ஆண் நண்பரை பாலியல் ரீதியாகத் தாக்கிய 45 வயது ஜெஃப்ரி பேவுக்கு திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படிகளும் விதித்தது. இருவரும் 2017 ஜூலை 23ஆம் தேதி மதுபானக் கூடத்தில் சந்தித்தனர்.
ஏப்ரல் மாதம் மூன்று பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் பே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
தனது நீண்டகால காதல் வாழ்க்கையில் தோல்வியைக் கண்ட பாதிக்கப்பட்டவர், மதுக்கூடத்தில் ஒரு பெண் மீது ஆர்வமாக இருந்தார். அப்பெண்ணுடன் தொடர்புடைய பேயுடன் நட்புக்கொள்ள விரும்பினார். பே 2017 ஜூலை 29ஆம் தேதி நடந்த தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இளையரை அழைத்தார். இருவரும் கைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டனர்.
இருவரும் வாட்ஸ்அப்பில் அரட்டை அடிக்கத் தொடங்கினர்.
இருவரும் 2017 ஆகஸ்ட் 8 அன்று இரவு மது அருந்துவதற்காக சந்தித்தனர். இளையர், குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் படுத்து உறங்க முடியுமா என்று கேட்டதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.
அங்கு, பே இளையருக்கு மதுபானம் கொடுத்தார். பாதிக்கப்பட்டவர் பேயின் படுக்கையறையின் தரையில் தூங்கினார். அவர் சிறிது நேரம் கழித்து விழித்தபோது பே அவரை பாலியல் ரீதியாக தாக்கப்படுவதை உணர்ந்தார். பேயின் செயலால் அருவருப்படைந்த இளையர் அவரைத் தள்ளி விட்டு, குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். பின் நண்பரின் ஆலோசனையின்படி காவல்துறையில் புகார் செய்தார்.
தீர்ப்பு, தண்டனைக்கு எதிராக பே மேல்முறையீடு செய்துள்ளார். $80,000 பிணையில் அவர் உள்ளார்.

