தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் சண்முகம்: வாடகை பங்களாவைப் புதுப்பிக்க $500,000 செலவு செய்தேன்

3 mins read
4e7c5b5f-5671-447a-9a7d-9b2e9a738ca4
ரிடவுட் ரோடு பங்களா எல்லைக்கு வெளியே உள்ள கூடுதல் இடம் தனக்குத் தேவையில்லை அதை தான் விரும்பவும் இல்லை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாடகைக்கு எடுத்துக்கொண்ட எண் 26 ரிடவ்ட் ரோடு பங்களாவைப் புதுப்பிக்க $500,000க்கும் மேற்பட்ட தொகையைத் தான் செலவிட்டு இருப்பதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த பங்களாவிற்கான வாடகை மூலம் தனக்கு பணமிச்சம் இல்லை என்றார் அவர்.

அமைச்சர் சண்முகமும் வெளியறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் எண் 26, எண் 31 ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்துக்கொண்ட பிரச்சினை பற்றி மன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையை அமைச்சர் சண்முகம் தாக்கல் செய்தார்.

திரு சண்முகம் $26,500 மாத வாடகையும் அமைச்சர் திரு பாலகிருஷ்ணன் $20,000 மாத வாடகையும் செலுத்துகிறார்கள்.

தன் குடும்ப வீடான, நல்ல நிலையில் உள்ள பங்களாவைத் திரு சண்முகம் வாடகைக்கு விட்டிருந்தார். தான் பெறும் வாடகையையும் தான் செலுத்தும் வாடகையையும் பார்க்கும்போது பணமிச்சம் எதுவுமில்லை என்றும் அவர் கூறினார்.

திரு சண்முகம், 2016ல் தன் நிதி ஆதாரத்தைப் பரிசீலித்தார். அளவுக்கு அதிக சேமிப்புத் தொகை தன் குடும்ப வீட்டில் முடங்கிக் கிடக்கிறது என்பதை அவர் உணர்ந்தார்.

அதையடுத்து தான் வழக்கறிஞராக இருந்தபோது கிடைத்த சம்பாத்தியத்தைக் கொண்டு வாங்கிய தன் குடும்ப வீட்டை விற்றுவிடலாம் என்று 2018ல் அவர் முடிவு செய்தார். என்றாலும் இறுதி முடிவு எடுக்கும்வரை குடும்ப வீட்டை வாடகைக்கு விடலாம் என்று அவர் முடிவுசெய்தார்.

எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்க்கையில் கிடைத்த வாடகையைவிட கொடுக்க வேண்டிய வாடகை அதிகமாக இருந்தது என்றார் அமைச்சர்.

“சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் முன்பு தான் வழக்கறிஞராக இருந்தபோது சம்பாதித்த தொகையைக் கொண்டு எண் 26 ரிடவுட் பங்களாவுக்கு வாடகையைச் செலுத்துகிறேன்,” என்று திரு சண்முகம் தெரிவித்தார்.

குடும்ப வீட்டை விற்பதற்கு ஏதுவாக வாடகை வீட்டுக்கு இடமாற அவர் முடிவு செய்து பல வாடகை வீடுகளைத் தேடினார்.

எண் 26 ரிடவுட் பங்களாவை 2018ல் வாடகைக்குப் பெற முடிவு செய்தபோது, வாடகை $25,000 என்றால் எடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சரின் சொத்து முகவர் அமைச்சரிடம் கூறினார். சிங்கப்பூர் நில ஆணையம் $26,500 வாடகை கேட்டது.

மறுபேச்சின்றி அந்த வாடகை ஒப்புக்கொள்ளப்பட்டது. ரிடவுட் வாடகை பங்களா எல்லைக்கு வெளியே இருந்த கூடுதல் இடம் இப்போது வாடகையின் ஒரு பகுதியாக இருக்கிறது. 150,000 சதுர அடி பரப்புள்ள அந்த இடம் காடாக இருந்தது.

அதனால் மரம் விழுவது, கொசுக்கடி போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருந்தது. அதைச் சொந்த செலவில்தான் பராமரிக்க வேண்டி இருக்கும் என்று அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு இணங்கினால் அந்த வெளி இடமும் வாடகை ஏற்பாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என்று சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது. அந்த வெளி இடம் தனக்குத் தேவையில்லை, அதைத் தான் விரும்பவில்லை என்றாலும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

எண் 26 ரிடவுட் பங்களா நான்கு ஆண்டுகளாக யாரும் குடியில்லாத, பழைய கட்டடமாக இருந்ததால் மேம்பாடுகளைச் செய்ய $500,000க்கும் அதிக தொகையைத் தான் செலவிட்டதாகவும் அமைச்சர் சண்முகம் மன்றத்தில் தெரிவித்தார்.

தனிப்பட்ட விவகாரம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளைப் பற்றி மன்றம் விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக அமைச்சர் சண்முகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்