தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்: கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வசிக்கவே ரிடவ்ட் பங்களாவை வாடகைக்கு எடுத்தோம்

2 mins read
30fe4430-6f36-48d6-8363-048e4c8e873a
கூட்டுக் குடும்பமாகச் சேர்ந்து வசிக்கவே எண் 31 ரிடவ்ட் ரோடு பங்களாவை வாடகைக்கு எடுத்ததாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். - படம்: GOV.SG 

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், எண் 31 ரிடவ்ட் ரோடு பங்களாவைத் தானும் தன் மனைவியும் வாடகைக்கு எடுத்ததற்கான காரணங்களை திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

தங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஒரே இடத்தில் வசிப்பதற்குத் தோதாக 824.3 சதுர மீட்டர் பரப்புள்ள அந்தப் பங்களாவைத் தாங்கள் தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் பாலகிருஷ்ணனின் நான்கு பிள்ளைகளில் இருவருக்கு 2018ல் திருமணம் நடந்து இரண்டு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும் குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் பாலகிருஷ்ணன் மன்றத்தில் தெரிவித்தார்.

டாக்டர் பாலகிருஷ்ணனின் துணைவியார் 2018 செப்டம்பரில் தனக்குத் தெரிந்தவர் ஒருவரைப் பார்க்கப் போனபோது எண் 31 ரிடவ்ட் ரோடு பங்களா வாடகைக்கு விடப்படும் என்று எடுப்பாக அறிவிப்புப் பலகையில் அறிவிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தார்.

அதிலிருந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டார். கோலியர்ஸ் இன்டர்நேஷனல் கன்சல்டன்ஸி அண்ட் வேல்யுவேஷன் நிறுவனத்தின் சொத்து முகவர் ஒருவருடன் பேசினார்.

அதற்கு முன்னதாக அமைச்சர் தம்பதியர் அரசாங்கச் சொத்துத் தகவல் இணையத் தளத்திற்குச் சென்று பல தகவல்களையும் தெரிந்துகொண்டனர்.

வாடகைக்கு குடியேறியபோது அந்தப் பங்களாவில் பல பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

அந்தப் பணிகளைச் செய்தால்தான் அதில் வசிக்க முடியும் என்ற நிலையும் இருந்தது.

பக்கத்தில் இருந்த மூன்று சொத்துகளில் பெரிய அளவில் மறுகட்டுமானப் பணிகளும் நடந்து வந்தன.

வாடகை தொடக்கத்தில் மாதம் $19,000 என்று தெரிவிக்கப்பட்டது. இது அந்தச் சொத்துக்கான வழிகாட்டி வாடகையைவிட அதிகம். 2022ல் அமைச்சரின் மனைவி கேட்டுக்கொண்டதன் பேரில் குத்தகை மூன்றாண்டுகளுக்கு மாதம் $20,000 வாடகை என்ற அளவில் புதுப்பிக்கப்பட்டது என்று அமைச்சர் மன்றத்தில் கூறினார்.

அந்தப் பங்களாவில் மேம்பாட்டுப் பணிகளில் $200,000க்கும் மேற்பட்ட தொகையைத் தான் செலவழித்து இருப்பதாகவும் டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வாடகை உடன்பாடு முடியும் போது இந்தப் பணம் திரும்பாது என்பது தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

சொத்து முகவர் மூலமாக தாங்கள் செயல்பட்டாலும் அந்த உடன்பாட்டைப் பொறுத்தவரை வாடகைக்கு விடும் தரப்பு அரசாங்கம் என்பது தனக்கும் தன் மனைவிக்கும் தெரியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒவ்வொன்றும் ஒளிவுமறைவு இல்லாமல் நேர்மையான வழியில் இடம்பெறுவதை உறுதிப்படுத்த எப்போதுமே தாங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்