சிங்கப்பூர் நில ஆணையம் எண் 26, எண் 31 ரிடவ்ட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு விட்டதில் முறையாகச் செயல்பட்டு இருக்கிறது.
அந்த ஏற்பாட்டில் ஒவ்வொன்றும் நியாயமாகவும் வர்த்தக அடிப்படையிலும் இடம்பெற்று இருக்கின்றன என்று இரண்டாம் சட்ட அமைச்சர் எட்வின் டோங் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மரபுடைமைச் சொத்துகளை வகைப்படுத்தி வெளியிட இந்த ஆணையம் கைக்கொள்ளும் அணுகுமுறை பற்றி திரு டோங் அமைச்சர்நிலை அறிக்கையில் விவரித்தார்.
அந்த இரண்டு காலனித்துவ கால பங்களாக்களை விளம்பரப்படுத்தியது, மதிப்பிட்டது, வாடகைக்குக் கொடுத்தது ஆகியவற்றில் தனது நடைமுறைகள், தரங்களுக்கு ஏற்ப ஆணையம் செயல்பட்டு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சட்ட அமைச்சர் கா சண்முகத்தின் துணைவியார் எண் 26 ரிடவ்ட் ரோடு முகவர் பங்களாவை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு எடுக்கும் உடன்பாட்டில் 2018ல் கையெழுத்திட்டார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் துணைவியார் எண் 31 ரிடவ்ட் ரோடு பங்களாவை மூன்றாண்டு வாடகைக்கு எடுக்கும் உடன்பாட்டில் 2019ல் கையெழுத்திட்டார்.
இந்த உடன்பாடுகளை விரும்பினால் நீட்டித்துக் கொள்ளலாம் என்ற விருப்ப உரிமையும் இருந்தது.
அந்த இரண்டு வாடகை ஏற்பாட்டு நிபந்தனைகளும் தரங்களுக்கு உட்பட்டு இடம்பெற்றன. வழக்கமான நடைமுறையில் இருந்து அவை விலகிச் செல்லவில்லை.
தொடர்புடைய செய்திகள்
எண் 26 ரிடவ்ட் ரோடு பங்களாவை வாடகைக்கு எடுப்பவர் அமைச்சர் சண்முகம் என்பது இந்த ஆணையத்தின் மதிப்பீட்டுத் துறைக்குத் தெரியாது என்றும் திரு டோங் அமைச்சர்நிலை அறிக்கையில் குறிப்பிட்டார்.
பங்களா குடியிருப்புப் பேட்டை அனைத்தையும் 30 முதல் 60 ஆண்டுகாலம் குத்தகைக்கு விடும் சாத்தியம் பற்றி ஆணையம் பரிசீலித்து வருகிறது என்றும் அவர் மன்றத்தில் தெரிவித்தார்.