சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்னன் இருவரும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர்கள் மீதான தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் பிரதமர் லீ சியன் லூங் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்பு புலன்விசாரணைப் பிரிவும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் நடத்திய புலன்விசரணைகள் மூலம் அந்த இருவரும் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது உறுதியாகி இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் நில ஆணையத்திடம் இருந்து காலனித்துவ பங்களாக்களை இரண்டு அமைச்சர்களும் வாடகைக்கு எடுத்ததில் எந்தத் தவறும் இடம்பெறவில்லை.
அனைத்தும் முறையாக இடம்பெற்று இருக்கின்றன. அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன என்று திரு லீ மன்றத்தில் குறிப்பிட்டார்.
ரிடவ்ட் ரோடு பங்களாக்கள் விவகாரம் தொடர்பில் திங்கட்கிழமை நான்கு அமைச்சர்நிலை அறிக்கைகள் தாக்கலாயின. அவற்றுக்குப் பிறகு பிரதமர் உரையாற்றினார்.
நடைமுறைக்கு உகந்த, போட்டித்திறன்மிக்க சம்பளம் சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு வழங்கப்படுகிறது. யாருக்கும் ஊக்குவிப்புகள் இல்லை. வசிக்க அதிகாரத்துவ வீடு கிடையாது. சம்பளம் கிடைக்கும்.
அவரவருக்கான தேவையை அவரவரே முடிவு செய்துகொள்ள வேண்டும்.
பணத்தைச் சேமிக்கலாம், கொடுக்கலாம், செலவழிக்கலாம், வீட்டில் போடலாம், பயணம் செய்து செலவிடலாம், விருப்பப்படி செயல்படலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆகையால், அமைச்சர்கள் வாடகைக்கு வீட்டை எடுக்க முடிவு செய்தால், வாங்க முடிவு செய்தால் அவை எல்லாம் தனிப்பட்ட முடிவு என்றாரவர்.
அமைச்சர் சண்முகமும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் ரிடவ்ட் ரோட்டில் உள்ள பங்களாக்களை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டதுமே அதில் எந்தத் தவறும் இடம்பெற்று இருக்காது என்பதே தமது எண்ணமாக இருந்தது என்று திரு லீ குறிப்பிட்டார்.
‘‘எனது அமைச்சர்கள் மீது எனக்கு நூற்றுக்கு நூறு முழு நம்பிக்கை உள்ளது. சிங்கப்பூர் நில ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் சரியான முறையில் செயல்பட்டு வாடகையை முறையாக நிர்ணயித்து இருக்கிறார்கள்,’’ என்றும் திரு லீ தெரிவித்தார்.
இருந்தாலும், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் நாட்டம் காட்டியதால் இரண்டு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுகள் ஈடுபடாத வகையில் சுதந்திரமாகப் புலன்விசாரணையை நடத்தும்படி தம்மைக் கேட்டுக்கொண்டதாக திரு லீ குறிப்பிட்டார்.
அமைச்சர்கள்மீதும் சிங்கப்பூரின் நிர்வாக முறைமீதும் எள்ளளவும் தமக்கு ஐயமில்லை என்றாலும்கூட முறையாக விசாரணையை நடத்தி ஊழல் அல்லது தவறு ஏதேனும் இடம்பெற்று இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கும்படி ஊழல் ஒழிப்புப் புலன்விசாரணைப் பிரிவுக்குத் தான் உத்தரவிட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அந்தப் பிரிவு சுதந்திரமாகச் செயல்படக்கூடியது. ஊழலை ஒழிப்பதில் அது உறுதியான நற்பெயரைப் பெற்று வந்திருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று என்றார் திரு லீ.
இந்த விவகாரத்தில் மேலும் பரந்த அளவிலான மறுபரிசீலனையைத் தான் விரும்பியதாகவும் பிரதமர் கூறினார்.
அமைச்சர்களுக்கு அனுகூலம் ஏதாவது கிடைத்ததா, அவர்களுக்கு அனுகூலமான தகவல் ஏதாவது தெரிவிக்கப்பட்டதா என்பதைக் கண்டறியவும் தான் விரும்பியதாக திரு லீ குறிப்பிட்டார்.
‘‘சட்டம் தொடர்பான தவறு எதுவும் நடைபெறவில்லை என்பதோடு நான் மனநிறைவு அடைந்துவிட முடியாது. அதற்கு அப்பாலும் தவறான நடத்தை, முறையற்ற செயல்கள் ஏதாவது இடம்பெற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும் பிரதமர் என்ற முறையில் எனது கடமை,’’ என்றார் திரு லீ.
ஊழல் ஒழிப்புப் பிரிவு நடத்திய புலன்விசாரணைக்கு உறுதுணையாக இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்யும்படி மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சரவையில் அதிக காலம் இருந்து வரும் திரு டியோ, பழுத்த அனுபவசாலியும் ஆவார் என்பதை பிரதமர் சுட்டினார்.
திரு டியோ புலன்விசாரணையை நடத்த போதுமான அளவுக்குச் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவராக இல்லை என்று திங்கட்கிழமை சில உறுப்பினர்கள் கருத்து கூறினர்.
இதை வேறு மாதிரியாகப் பார்ப்பதாகக் கூறிய திரு லீ, ஊழல், தவறுகளைப் பொறுத்தவரை அவற்றைக் கையாள சுதந்திரமான நடைமுறைகள் நடப்பில் உள்ளன என்றார்.
அதேவேளையில், நியதிகள், முறையான செயல்களின் தரங்கள் என்று வரும்போது அவை பிரதமரின் பொறுப்பு என்றும் நியதி, முறையான செயல் ஆகியவற்றின் தரங்களை தான் நிர்ணயிக்க வேண்டி இருக்கிறது என்றும் திரு லீ கூறினார். இந்தப் பொறுப்பை வேறு யாரிடமும் விடமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரிடவ்ட் ரோடு வாடகை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மட்டும் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை விவாதம் நடக்கவில்லை.
மக்கள் செயல் கட்சி 1959ஆம் ஆண்டு முதல் தனக்குத் தானே நிர்ணயித்துக்கொண்ட உயர் தரங்களைக் கட்டிக்காக்க அந்தக் கட்சி எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாகவும் அந்த விவாதம் இருக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.