அமைச்சர் சண்முகம்: என் புதல்வரை தொடர்புபடுத்தும் செய்திகள் முழுப் பொய், அவதூறானவை

அமைச்சர் சண்முகம்: என் புதல்வரை தொடர்புபடுத்தும் செய்திகள் முழுப் பொய், அவதூறானவை

2 mins read
d20cf402-83b0-477c-8a88-3841380eadec
தன் புதல்வரை தொடர்பு படுத்தும் செய்திகள் முழுப் பொய், அவதூறானவை என்று திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

எண் 26, எண் 31 ரிடவ்ட் பங்களாக்களைப் புதுப்பிக்கும் குத்தகைகளில் தனது புதல்வர் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவது முழுப் பொய் என்றும் அப்படி கூறுவது அவதூறானது என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தனது புதல்வர் திரு ரவிச்சந்திரன் 2019 ஆண்டில் இருந்து வேலை பார்த்து இருக்கும் லிவ்ஸ்பேஸ் என்ற வீட்டு வேலை, புதுப்பிப்பு நிறுவனத்திற்கு சிங்கப்பூர் நில ஆணையம் குத்தகைகளைக் கொடுத்து இருக்கிறது என்று கூறப்படுவதை மறுத்த அமைச்சர், அப்படி கூறப்படுவது தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் தொடுக்கப்படும் “தாக்குதல்கள்” என்றார்.

‘‘அப்படி கூறுவோரிடம் நான் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைக் குறைகூறுவதென்றால் கூறுங்கள். என்னை தற்காத்துக்கொள்ளும் அளவுக்கு முழுமையான ஆற்றல் என்னிடம் இருக்கிறது. ஆனால், என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்,’’ என்று திரு சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சரின் புதல்வரைத் தொடர்புபடுத்தும் அத்தகைய செய்திகள் இணையத்தில் சென்ற வார முடிவில் தலைகாட்டத் தொடங்கியதுமே அது தொடர்பான சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டதாக இரண்டாம் சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.

அந்த இரண்டு ரிடவ்ட் பங்களாக்களைப் புதுப்பிப்பதற்கான குத்தகை நிறுவனமாக லிவ்ஸ்பேஸ் நியமிக்கப்படவில்லை என்பது அந்தச் சோதனைகள் மூலம் தெரியவந்தது.

சிங்கப்பூர் நில ஆணையத்துக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையில் எந்தப் பரிவர்த்தனைகளும் இடம்பெறவில்லை.

அமைச்சர் சண்முகத்தின் புதல்வர் அல்லது அவருடைய நிறுவனம் குத்தகை நிறுவனமாக நியமிக்கப்பட்டது என்று கூறுவது முற்றிலும் நிந்தையானது, தகாத ஒன்று என்று திரு டோங் குறிப்பிட்டார்.

இதனிடையே, ரிடவ்ட் ரோட்டில் உள்ள எந்தவொரு கட்டடத்திலும் வேலையையோ திட்டத்தையோ சிங்கப்பூர் நில ஆணையத்திற்காக, வீட்டு உரிமையாளர்களுக்காக அல்லது வாடகைதாரர்களுக்காக தான் மேற்கொள்ளவில்லை என்று லிவ்ஸ்பேஸ் தெரிவித்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்கப்பூர் நில ஆணையத்துடன் லிவ்ஸ்பேஸ் நிறுவனத்துக்கு எந்த உடன்பாடும் இல்லை. எந்தவொரு வேலையையும் செய்யும்படி ஆணையம் இந்த நிறுவனத்தை ஒருபோதும் நியமிக்கவும் இல்லை என்று இந்தியாவின் பெங்களூரு நகரில் 2014ல் நிறுவப்பட்ட அந்த நிறுவனம் தெரிவித்தது.

ரிடவ்ட் ரோடு விவகாரத்தில் அமைச்சர் சண்முகத்தின் புதல்வர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இணையப் பதிவு ஒன்றில் எதிர்த்தரப்பு அரசியல்வாதியான கென்னத் ஜெயரத்னம் தெரிவித்தார்.

இருந்தாலும் அந்தத் தகவலை தான் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோன்ற குற்றச்சாட்டுகளை தலைமறைவாகி இருக்கும் வழக்கறிஞர் சார்ல்ஸ் இயோ இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டார்.

அமைச்சர் சண்முகத்தின் புதல்வரான திரு ரவிச்சந்திரன் சண்முகம் 2019 மார்ச் மாதம் லிவ்ஸ்பேஸ் நிறுவனத்தில் அதன் சிங்கப்பூர் தலைவராக பணியில் சேர்ந்தார். பிறகு அவர் 2021 ஜூன் மாதம் அந்த நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய தலைமை நிர்வாகியாக ஆனார் என்பது அவருடைய லிங்க்டின் இணையத்தள விவரங்கள் மூலம் தெரியவருகிறது.

குறிப்புச் சொற்கள்