முதலாளியின் மாமியாரைக் கத்தியால் குத்திய பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

2 mins read
b061bee1-d7a9-4dab-96aa-370f79c572bd
22 வயது ஸின் மார் நுவே மீது கடந்த மே மாதம் உயர் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் நிரூபணமானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதலாளியின் மாமியாரை 26 முறை கத்தியால் குத்திய கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இல்லப் பணிப்பெண் ஸின் மார் நுவேவிற்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

70 வயது மாமியார் அந்தப் பணிப்பெண்ணை மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப் போவதாக மிரட்டியிருந்தார்.

இப்போது 22 வயது நிரம்பிய ஸின் மார் நுவே மீது கடந்த மே மாதம் உயர் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் [Ϟ]நிரூபணமானது.

அவர் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணிப்பெண்ணாக சிங்கப்பூர் வந்திருந்தார். அவரது முகவர் அவருக்கு 23 வயது எனத் தெரிவிக்கச் சொல்லியிருந்தார்.

இருப்பினும், கத்திக் குத்துச் சம்பவம் நடந்த சில நாள்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அவரின் வயது 17தான் என்று தெரியவந்தது.

அதனால் ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படமுடியும் என்று நீதிபதி அண்ட்ரே மணியம் கூறினார்.

குற்றவியல் நடைமுறைத் தொகுப்பின்கீழ், குற்றம் புரிந்த நேரத்தில் 18 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவருக்கு மரணத் தண்டனை விதிக்கமுடியாது.

ஸின் மார் நுவே அவரது மூன்றாவது முதலாளியான திரு எஸ்ஸிற்கு 2018ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியிலிருந்து பணிபுரிய தொடங்கினார்.

அதே ஆண்டு மே 26ஆம் தேதியன்று அந்த முதலாளியின் மாமியார் இந்தியாவிலிருந்து ஒரு மாதம் தங்கியிருப்பதற்காக இங்கு வந்திருந்தார்.

ஜூன் மாதம் 25ஆம் தேதி அந்தப் பணிப்பெண்ணும் மாமியாரும் தனியாக வீட்டில் இருந்தபோது, பணிப்பெண் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து பல முறை மாமியாரைக் குத்தினார்.

மாமியார் தம்மை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாய்ப் பணிப்பெண் கூறினார்.

தம்மை முகவரிடம் திருப்பி அனுப்பப்போவதாக மாமியார் மிரட்டியதைத் தொடர்ந்து, பணிப்பெண் அவரைக் கத்தியால் குத்தினார்.

குறிப்புச் சொற்கள்