துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், கடந்த பிப்ரவரி மாதம் வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது ஓர் உதவித் திட்டத்தைப் பற்றி அறிவித்தார்.
அந்தத் திட்டத்தின்படி, ஏறக்குறைய 1.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் $700 வரை பணம் கிடைக்கும்.
வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க உதவியாக அத்தொகை வழங்கப்படும்.
தகுதி உள்ள குடிமக்களுக்கு பொருள் சேவை (ஜிஎஸ்டி) வரி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் 2023ல் கூடுதலாக $300 கிடைக்கும் என்றும் நிதி அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
சிங்கப்பூரர்கள் சென்ற ஆண்டில் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு சிறப்புத் தொகை உட்பட இரண்டு தடவையாக $700 வரை பெற்றனர்.
ஆனால் இந்த ஆண்டில் ஒரே ஒரு முறையாக பணம் கொடுக்கப்படும்.
ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக ஏறக்குறைய 624,000 சிங்கப்பூரர்களின் மத்திய சேமநிதி மருத்துவச் சேமிப்புக் கணக்கில் $450 வரவு வைக்கப்படும்.
அந்த சிங்கப்பூரர்கள், 65 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள பிரிவினராவர். 1969ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாகப் பிறந்தவர்கள், முன்னோடித் தலைமுறை அல்லது மெர்டேக்கா தலைமுறை நன்மைகளைப் பெறாதவர்களின் மருத்துவச் சேமிப்புக் கணக்கில் $100 வரவு வைக்கப்படும் என்றும் அமைச்சு கூறி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஜிஎஸ்டி வரி உயர்வு, வாழ்க்கைச் செலவு ஆகியவற்றைச் சமாளிக்க ஏதுவாக, குறைந்த வருமான, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் அரசாங்கம் வழங்கிவரும் தொடர் ஆதரவின் ஒரு பகுதியாக இந்தப் பணப்பட்டு வாடாக்கள் இடம்பெறுவதாக அமைச்சு தெரிவித்தது.
தகுதி உள்ள சிங்கப்பூரர்கள், உத்தரவாதத் திட்டத்தின்படி கிடைக்கும் தொகையையும் இரண்டு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளையும் பெற்று இருப்பார்கள் என்றும் அது மேலும் குறிப்பிட்டது.
சிறார் மேம்பாட்டு கணக்கில் பணம், பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடிகள், சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள், உத்தரவாதத் திட்டத்தின்கீழ் கிடைக்கும் தொகை உள்ளிட்ட மேலும் ஆதரவை சிங்கப்பூர்களும் அவர்களின் குடும்பத்தாரும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கலாம் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

