மியன்மார் மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுவதை சிங்கப்பூர் விரும்பவில்லை. அதனால் பொதுவாக அது மியன்மாருடன் கூடிய வர்த்தகத்துக்குத் தடை விதிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அதேவேளையில், ராணுவ பயனீடு சாத்தியம் உள்ள பொருள்களையும் அப்பாவி குடிமக்களைப் பாதிக்கும் அளவுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருள்களையும் மியன்மாருக்கு விற்பதைத் தடுக்கக்கூடிய தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சிங்கப்பூர் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருககிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
செம்பவாங் குழுத்தொகுதி உறுப்பினர் விக்ரம் நாயர், ஹவ்காங் தொகுதி பாட்டாளிக் கட்சி உறுப்பினர் டெனிஸ் டான் ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் அமைச்சர் இந்த விவரங்களைத் தெரிவித்து இருக்கிறார்.
மியன்மாரில் செயல்படும் ஐநா சிறப்புச் செய்தியாளரான டாம் ஆண்ட்ருஸ் என்பவர் மே 17ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அது பற்றி அந்த உறுப்பினர்கள் கேட்டிருந்தனர்.
மியன்மார் ராணுவத்துக்குக் கிடைத்த பொருள்களில் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் எப்படி சம்பந்தப்பட்டு இருந்தது என்பதை அந்த அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் மூலமாக US$254 மில்லியன் (S$343 மில்லியன்) மதிப்புள்ள ஆயுதங்களும் தொடர்புடைய பொருள்களும் மியன்மார் ராணுவத்துக்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று அந்த அறிக்கை கூறியது.
இதற்குப் பதிலளித்த டாக்டர் பாலகிருஷ்ணன், தொடக்கத்தில் 47 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் பிறகு அண்மையில் இதர 91 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
திரு ஆண்ட்ருஸின் அறிக்கையை மிகக் கடுமையான ஒன்றாகக் கருதுவதாகத் தெரிவித்த அமைச்சர், தங்கள் முயற்சிகளுக்கு உதவியாக சாட்சியங்களை வழங்கும்படி அவருக்கு வேண்டுகோள் விடுத்து இருப்பதாகவும் கூறினார். புலன்விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இருந்தாலும் மியன்மாருடன் கூடிய வர்த்தகத்தை தடை செய்வது நோக்கமல்ல என்றாரவர்.
மியன்மாருடன் சட்டபூர்வமான வர்த்தகத்தை தடை செய்யும் கொள்கை சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இல்லை. அப்படி செய்தால் அந்த நாட்டின் மேம்பாடு மேலும் பாதிக்கப்படும். மியன்மார் குடிமக்கள் மேலும் இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்று அமைச்சர் விளக்கினார்.
அடையாளம் காணப்பட்டு இருக்கும் நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் கணக்குப் பதிவியல், நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிந்திருக்கவில்லை.
அதாவது அந்த நிறுவனங்கள் சிங்கப்பூரில் சட்டபூர்வமான நிறுவனங்களாகச் செயல்படவில்லை என்றாரவர்.
தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்ட 47 நிறுவனங்களில் பெரும்பாலானவை சிங்கப்பூர் வங்கிகளுடன் தொழில் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. வங்கிகள் எஞ்சிய கணக்குகளையும் மறுபரிசீலனை செய்து ஏற்புடைய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

