இவ்வாண்டு இறுதியில் சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியா செல்வோர் நெட்ஸ் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் வழியாக தங்கள் விவேக கைப்பேசிகளை கொண்டு கியூஆர் குறியீடு மூலம் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
அதேபோல், இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோர் நெட்ஸ் மூலம் மின்னிலக்க முறையில் கியூஆர் குறியீட்டை வருடி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பணப் பரிவர்த்தனை தொடர்பை ஏற்படுத்தும் பணி 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்தப் பணி பாதியளவு முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பயன்பாட்டாளர் ஏற்பு முறை சோதனைகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதில் பரிசோதனை நடத்தப்பட்டு இரு நாட்டு பயன்பாட்டாளர்களும் இணைந்துள்ளது தெரிகிறது. அதனால், ஆண்டிறுதிக்குள் இதை அமல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது,” என்று இந்தோனீசியாவின் ‘ஃபிலாங்சி ஹென்டார்ட்டா’ நிறுவனத்தின் துணை ஆளுநர் தெரிவித்தார்.
இது பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த நெட்ஸ் சேவையின் பேச்சாளர், இந்தோனீசியாவின் ‘குவிக் ரெஸ்போன்ஸ் கோட் இந்தோனீசியா ஸ்டாண்டர்ட்’ செயலியும் நெட்ஸ் முறை எல்லை தாண்டிய கியூஆர் பணப் பரிவர்த்தனை இணைப்பும் தற்பொழுது அமைப்பு நிலையில் உள்ளதாகவும் ஆண்டிறுதியில் இதை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
“தொழில் துறை ஒத்துழைப்புடன் உள்ளூர் வர்த்தகர்களுக்கு வசதி செய்து தருவதுடன் சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் தெரிவுகளை இது வழங்கும்,” என்று நெட்ஸ் பேச்சாளர் விளக்கினார்.
இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இரு நாட்டு கியூஆர் குறியீடு பணப் பரிவர்த்தனை முறை தொர்பான பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதன்மூலம், சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியா செல்வோர் அங்கு தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு கியூஆர் குறியீடு வழி கட்டணம் செலுத்தலாம்.
இது தனியார், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஆகியோர் எல்லை தாண்டிச் சென்று மின் வர்த்தகம், மற்ற நிதி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடும்படும்போது அவர்கள் தங்கள் காரியத்தை கச்சிதமாக முடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன், இந்த முறை பணப் பரிவர்த்தனை பயணத் துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.