ஆண்டுதோறும் 1,200 வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியருக்கு நிரந்தரவாச உரிமை

ஆண்டுதோறும் 1,200 வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியருக்கு நிரந்தரவாச உரிமை

2 mins read
e728851c-4bf4-4f74-92fa-6eb5d1800763
கடந்த ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் 1,200 வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியருக்கு நிரந்தரவாச உரிமை வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1,200 வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியருக்கு நிரந்தரவாச உரிமை வழங்கப்பட்டதாக சகாதார அமைச்சர் ஓங் யி காங் திங்கள்கிழமை தெரிவித்தார்.

அவர்களில் பத்து பேரில் ஆறு பேருக்கும் அதிகமானோர் தாதியர்கள்.

மருத்துவர்கள், சுகாதாரப் பட்டத்தொழிலர்கள், இதர சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் மற்றவர்களில் அடங்குவர் என்று நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் சிங்கப்பூரின் அதிகரிக்கும் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் நிறைவேற ஆதரவாகவும் ஆற்றிய மிகமுக்கிய பணியை அங்கீகரிக்கும் வகையில் சென்ற ஆண்டில் அதிக வெளிநாட்டுத் தாதியருக்கு நிரந்தரவாச உரிமை கொடுக்கப்பட்டதாக திரு ஓங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் அணியில் சிங்கப்பூரர்களே பெரும்பான்மையானவர்களாக இருக்கிறார்கள்.

அந்த அணியில் பல நாடுகளையும் சேர்ந்த வெளிநாட்டினரும் உள்ளனர். நம் சுகாதாரப் பராமரிப்பு முறையில் வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் முக்கிய அங்கமாக உள்ளனர்.

“நம்முடைய சுகாதாரப் பராமரிப்புச் சமூகத்தின் மதிப்புமிக்கவராக ஆகி சிங்கப்பூருக்கான கடப்பாட்டை வெளிப்படுத்துவோருக்கு நிரந்தரவாச உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஊழியருக்கு அந்த உரிமையைக் கொடுக்க நாம் ஆயத்தமாக உள்ளோம்,” என்றார் அமைச்சர்.

அண்மைய ஆண்டுகளில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு குறிப்பாக தாதியருக்கு உலகளவில் போட்டி கடுமையாகி இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்கப்பூர் ஊழியர் அணியில், இந்த ஆண்டு முடிவு வாக்கில் ஏறக்குறைய 4,000 புதிய தாதியர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அமைச்சர் சென்ற ஆண்டு நவம்பரில் தெரிவித்திருந்தார்.

அந்தப் புதிய தாதியர்கள், சிங்கப்பூரின் தாதியர் ஊழியர் அணியில் ஏறக்குறைய 10 விழுக்காட்டினராக இருப்பார்கள் என்றாரவர்.

குறிப்புச் சொற்கள்
சுகாதார அமைச்சு