தங்கள் பிள்ளைகளிடம் இருந்து பராமரிப்புப் பணம் கேட்கும் முதிய பெற்றோர் தாங்கள் தங்கள் பிள்ளைகளை முன்பு கொடுமைப்படுத்தி இருந்தால், கைவிட்டு இருந்தால், அலட்சியப்படுத்தி இருந்தால் அது பற்றி தெரிவிக்க வேண்டி இருக்கும்.
அப்படி தங்கள் பிள்ளைகளை அவர்கள் ஏதேனும் செய்து இருந்தால் பிள்ளைகளிடம் இருந்து பராமரிப்புக்குப் பணம் கேட்டு விண்ணப்பிக்க அவர்களைப் பெற்றோர் பராமரிப்பு நடுவர் மன்றம் அனுமதிக்காமல் இருந்துவிடக்கூடும்.
பெற்றோர் பராமரிப்புச் சட்டத்திற்கான திருத்தங்களை நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது. அதனை அடுத்து இவை எல்லாம் சாத்தியமாகின்றன.
ஆதரவில்லாத பெற்றோரின் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசாங்கப் பராமரிப்பின்கீழ் கட்டாய சமரச முயற்சிகளில் ஈடுபடும்படி அரசாங்கம் விரைவில் உத்தரவிட முடியும்.
பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதை பிள்ளைகளுக்கு நினைவூட்டும் வகையில் அரசாங்கம் இதைச் செய்ய முடியும்.
பெற்றோருக்கான ஏற்பாடுகளைப் பலப்படுத்தி, அதேநேரத்தில் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தி அதன்மூலம் சரியான ஒரு சமநிலையைக் காண இந்தத் திருத்தங்கள் முயலுகின்றன என்று மரின் பரேடு குழுத்தொகுதி உறுப்பினர் சியா கியான் பெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை அந்தத் திருத்தங்கள் கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
பிள்ளைகளைக் கடந்த காலத்தில் பெற்றோர் கொடுமைப்படுத்தி இருக்கும் பட்சத்தில், அத்தகைய பெற்றோருக்கு ஆதரவு அளிக்கும்படி பிள்ளைகளுக்கு உத்தரவிடுவது நியாயமானதாக இருக்காது.
தொடர்புடைய செய்திகள்
அந்தச் சட்டம், பெற்றோர்-பிள்ளை பாசத்தை சட்டமாக்கவோ கட்டாயமாக்கவோ விழையவில்லை. அதேவேளையில், பிள்ளைகள் குறைந்தபட்ச அடிப்படை அளவில் தங்கள் முதிய பெற்றோருக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த அந்தச் சட்டம் முயலுகிறது என்று திரு சியா குறிப்பிட்டார்.
திரு சியா அந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவின் தலைவராவார். பெற்றோர் பராமரிப்புச் சட்டம் 1995ல் நிறைவேற்றப்பட்டது. அது 2010ல் திருத்தப்பட்டது.
தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள இயலாத மூத்தோர், வசதியாக இருக்கும் தங்கள் பிள்ளைகள் தங்களைக் கவனித்துக்கொள்ளாத பட்சத்தில், அவர்களிடம் இருந்து பராமரிப்புத் தொகையைக் கேட்டு பெற அந்தச் சட்டம் வகை செய்கிறது.
அந்தச் சட்டத்தின்கீழ் 1996 முதல் ஏறத்தாழ 2,500 விவகாரங்கள் கையாளப்பட்டு இருக்கின்றன என்று திரு சியா குறிப்பிட்டார்.
இந்த நடுவர் மன்றம் இப்போது கையாளும் விவகாரங்களைப் பார்க்கையில், மூன்றில் ஒன்று தங்கள் பெற்றோரைப் பற்றி பிள்ளைகள் குறைகூறும் விவகாரமாக இருக்கிறது.
அந்த நடுவர் மன்றம் ஒரு நீதிமன்றத்தைப் போல் செயல்படுகிறது.
ஆகையால், தங்கள் பிள்ளைகளிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கேட்கும் பட்சத்தில், கடந்த காலத்தில் பிள்ளைகளைத் தாங்கள் கொடுமைப்படுத்தியிருந்தால், கைவிட்டிருந்தால், அலட்சியப்படுத்தியிருந்தால் அது பற்றி பெற்றோர் தெரிவிக்க வேண்டியது இப்போது தேவையான ஒன்றாகிறது.

