சிங்கப்பூர் நீரிணையில் செவ்வாய்க்கிழமையன்று மலேசியாவைச் சேர்ந்த நீளமான படகு ஒன்றிலும் இழுவைப் படகு ஒன்றிலும் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்புக் கழிவுகளை கடற்கொள்ளையர் நால்வர் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மலேசிய கடற்பகுதியில் இந்தச் சம்பவம் காலை சுமார் 8.30 மணிக்கு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜின்ஹுவா 40 என்ற பெயருடைய கப்பல் மலேசிய ஷிப்பிங் கார்ப்பரேஷனின் கிம்ஹாக் குழுமத்துக்கு சொந்தமானது. இந்தத் திருட்டு பற்றிக் கூறிய அதன் பேச்சாளர், கடற்கொள்ளையர் தட்டையான சிறிய படகில் வந்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.
“அந்த நீளப் படகில் ஒன்பது சிப்பந்திகள் உள்ளனர். ஆனால், தாக்குதல் நடந்த சமயம் படகில் எவரும் இல்லாததால் யாருக்கும் காயமில்லை.
“இந்தத் தாக்குதல் குறித்து சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தகவல் மையத்திடம் புகார் அளித்தோம். அத்துடன், தாக்குதல் நடத்தியவர்களும் கிட்டத்தட்ட காலை 9.30 மணிக்கு சென்றுவிட்டனர்,” என்று அந்தப் பேச்சாளர் விளக்கினார்.
புகார் குறித்து தகவல் வெளியிட்ட குடியரசு கடற்படையின் தகவல் மையம், அந்தப் படகு புருணையிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்ததாகக் கூறியது.
கப்பல்களில் திருட்டு, கடற்கொளளையை எதிர்த்துப் போராடும் வட்டார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்கீழ் இயங்கும் ஆசிய தகவல் பகிர்வு மையத்தின் கூற்றுப்படி இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சிங்கப்பூர் நீரிணையில் 41 கடற்கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.