தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகைமூட்டம் தொடர்பான பாதிப்புகளைக் கையாள மருத்துவமனைகள் தயாராகி வருகின்றன: அமைச்சர் கிரேஸ் ஃபூ

2 mins read
29e225e1-aa44-4ae8-a652-6ff85cfcb243
தென்கிழக்காசிய வட்டாரத்தில் தற்போது நிலவும் வறண்ட பருவநிலை, 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக வெப்பமான, ஆக வறட்சியான பருவமாகக் கருதப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் தற்போது வறண்ட பருவநிலை நிலவும் வேளையில், புகைமூட்ட பாதிப்பால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேரிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் அதனைத் திறம்படக் கையாள இங்குள்ள மருத்துவமனைகள் தயாராகி வருகின்றன.

போதிய எண்ணிக்கையில் N95 ரக முகக்கவசங்கள் கையிருப்பில் இருப்பதை அவை உறுதி செய்துவருகின்றன.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அந்தத் தகவல்களை வெளியிட்டார்.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியோருக்கு, குடியிருப்பாளர் குழு நிலையங்களையும் சமூக மன்றங்களில் உள்ள வாசிப்பு அறைகளையும் திறந்து விடுவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

புகை மூட்டம் மோசமானால் அவர்கள் அவ்விடங்களில் தஞ்சமடைய அந்நடவடிக்கை உதவும் என்றார் அவர்.

இயோ சூ காங் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங்கின் பரிந்துரை தொடர்பில் அமைச்சர் ஃபூ பதிலளித்தார்.

முன்னதாக, குளிரூட்டும் சாதனங்கள், காற்றைத் தூய்மைப்படுத்தும் சாதனங்கள் போன்றவை பொருத்தப்படாத வீடுகளில் வசிக்கும் முதியோருக்கு ‘புகைமூட்டச் சரணாலயங்கள்’ அமைக்கலாம் என்று திரு யிப் பரிந்துரைத்தார்.

எல் நினோ பருவநிலை நிகழ்வால் அடுத்த சில மாதங்களுக்குத் தென்கிழக்காசிய வட்டாரத்தில் வெப்பமான, வறண்ட வானிலை ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

மேலும், ‘பாசிட்டிவ் இண்டியன் ஓஷியன் டைபோல்’ எனப்படும் நிகழ்வால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இரு நிகழ்வுகளாலும் சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் காட்டுத் தீச்சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்பதையும் அதனால் எல்லை கடந்த புகைமூட்டப் பிரச்சினை ஏற்படும் அபாயம் இருப்பதையும் அமைச்சர் ஃபூ சுட்டினார்.

சுகாதார அமைச்சு போதிய எண்ணிக்கையில் N95 ரக முகக்கவசங்களின் கையிருப்பை உறுதிசெய்திருப்பதாகவும் தேவைப்படும்போது சில்லறை விற்பனை மருந்துக்கடைகளுக்கு அவை விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புகைமூட்டம் தீவிரமானால், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களுக்கும் முகக்கவசங்களை விநியோகிக்க, புகைமூட்டம் தொடர்பான அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழுவும் மக்கள் கழகமும் இணைந்து திட்டமிடுகின்றன.

எல்லை தாண்டிய புகைமூட்டம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் ஃபூ இவ்வாறு சொன்னார்.

நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாளும் முறை குறித்து மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகளில் காற்றைத் தூய்மையாக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தாதிமை இல்லங்கள் போதிய எண்ணிக்கையில் காற்றைத் தூய்மைப்படுத்தும் கருவிகளும் மருந்துப் பொருள்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

புகைமூட்டம் ஏற்பட்டால் வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவதற்குமுன் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டைத் தெரிந்துகொள்வது நல்லது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்