தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடியில் சிக்கும் சேமநிதி பணம்: சேமநிதிக் கழகம் விளக்கம்

2 mins read
95856b37-f833-47a9-af93-f176631d1de7
-

மோசடியில் சிக்கும் மத்திய சேமநிதி உறுப்பினர்களின் பணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்த மனிதவள அமைச்சின் பேச்சாளர், சேமநிதிப் பணம் உறுப்பினர்களின் வங்கிக் கணக்குக்குள், அவற்றை நன்கு சரிபார்க்கப்பட்ட பின்னரே, போடப்படுவதாகத் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை தமிழ் முரசு பக்கம் 2ல் வெளிவந்த ‘மத்திய சேமநிதி மோசடி: காப்புறுதிக்கு ஆலோசனை’ எனும் செய்தியில் மத்திய சேமநிதி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடிகளுக்குப் பறிகொடுப்போருக்குக் காப்புறுதித் திட்டங்களின் மூலம் கைகொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து மனிதவள அமைச்சு அதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளது.

இதுபோன்ற தீங்குநிரல் மோசடிச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது காவல் துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவர்களைக் கண்டுபிடிப்பதில் செயல்படும். அத்துடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கும் என மனிதவள அமைச்சின் பேச்சாளர் விளக்கினார். இதுபோன்ற மோசடிகளில் ஏற்படும் இழப்புகளுக்கு ஈடுசெய்யும் விதமாக உறுப்பினர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என அவர் விளக்கினார்.

அத்துடன், அரசாங்கமும் இந்தத் தொழில் துறை பங்காளிகளும் தங்கள் பெறுப்புகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய கட்டமைப்பில் காப்புறுதித் திட்டங்கள் இடம்பெறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

‘ஷேர்ட் ரெஸ்போன்சிபிலிட்டி ஃபிரேம்வோர்க்’ என்ற அந்தக் கட்டமைப்பு இணைய மோசடிகளில் சிக்கும் அபாயத்தை குறைக்க உதவக்கூடியவர்களின் பங்கு, பொறுப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும். இதில், வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புடன் இருந்து செயல்படும் கடமை உள்ளது என்பதை நினைவில் நிறுத்தி, நிதி நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் போன்றவற்றின் கடமைகளும் தெளிவாக வரையறுக்கப்படும்.

மேலும், மோசடிச் சம்பவங்கள் நிகழும்போது, சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கடமையிலிருந்து வழுவும்போது, இழப்புகளை பகிர்வது தொடர்பாகவும் முறையான செயல்திட்டம் வகுப்பதும் ‘ஷேர்ட் ரெஸ்போன்சிபிலிட்டி ஃபிரேம்வோர்க்’ கட்டமைப்பின் பொறுப்பாகும்.

இது மோசடிக்கு எதிரான காப்புறுதித் திட்டத்திலிருந்து வேறுபட்டதாகும்.

பல்வேறு அமைப்புகளின் பங்கு குறித்து கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நிதி நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், மின்னிலக்க பணப் பரிவர்த்தனை சூழலில் இந்தக் கட்டமைப்பின் வரையறை, மோசடிகள் ஏற்படும் விதம் ஆகியவை குறித்தும் அரசு தொடர்ந்து பரிசீலித்து வரும் என்று மனிதவள பேச்சாளர் சொன்னார்.