சிங்கப்பூருடன் வலுவான தற்காப்பு உறவுகளை மேம்படுத்தப் பங்காற்றியதைக் கௌரவிக்கும் வகையில் தாய்லாந்து, இந்தோனீசியா ஆகியவற்றின் ராணுவத் தலைவர்களுக்கு சிங்கப்பூர் ராணுவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அரச தாய்லாந்து ஆயுதப் படைத் தலைவரான ஜெனரல் சாலர்ம்பொன் ஸ்ரீசவாஸ்டிக்கு ராணுவத்துக்கான மெச்சத்தக்க சேவைப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருது அது.
சிங்கப்பூர் ஆயுதப் படைக்கும் அரச தாய்லாந்து ஆயுதப் படைக்கும் இடையில் அணுக்கமான, நீண்டகால உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக ஜெனரல் சாலர்ம்பொன் ஸ்ரீசவாஸ்டிக்கு அந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.
அதிபர் ஹலிமா யாக்கோப் இஸ்தானாவில் புதன்கிழமை அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தார்.
அவரது தலைமையின்கீழ் இரு நாட்டு ஆயுதப்படைகளும் தொழில்முறைப் பயிற்சிகள், ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் அணுக்கமான உறவை வளர்த்துக்கொண்டதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.
இந்தோனீசிய ராணுவத் தலைவர் ஜெனரல் டுடுங் அப்துர்ரஹ்மானுக்கு ராணுவத்துக்கான சிறப்புமிக்க சேவைப் பதக்கத்தை அதிபர் ஹலிமா அறிவித்தார்.
தற்காப்பு அமைச்சில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னிடம் இருந்து அதனை அவர் பெற்றுக்கொண்டார்.
சிங்கப்பூர், இந்தோனீசிய ராணுவங்களுக்கு இடையே, இருதரப்புத் தற்காப்பு உறவுகளை வலுப்படுத்த பங்களித்ததைப் பாராட்டும் விதமாக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டதாக அமைச்சு கூறியது.