தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்ப அலுவலகங்களில் 1,400 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு வேலைவாய்ப்பு

1 mins read
c86e9560-0b9b-425a-b9a3-e4e1df4a1ed6
குடும்ப அலுவலகங்களில் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமான 1,400 வேலைகளில் ஏறத்தாழ 900 வேலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2022 ஜூன் மாத நிலவரப்படி, வரி ஊக்கத்தொகைக்கு விண்ணப்பித்த குடும்ப அலுவலகங்களில் ஏறத்தாழ 1.400 சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

குடும்ப அலுவலகங்கள் சிங்கப்பூர்ப் பொருளியலுக்கு ஆற்றிய பங்கு குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட இரு கேள்விகளுக்கு வியாழக்கிழமை அவர் பதிலளித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் குடும்ப அலுவலகங்களில் 900 வேலைகள் உருவாக்கப்பட்டதாக திரு தர்மன் கூறினார்.

அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளுக்கு மாத ஊதியம் $5,000க்குமேல் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மீதம் ஒரு பங்கு வேலைகளில் 400க்கு மேற்பட்டவற்றுக்கு $2,000 முதல் $4,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படுவதாகவும் 50க்குக் குறைவான வேலைகளுக்கு மட்டுமே மாதம் $2,000 ஊதியம் என்றும் கூறப்பட்டது.

சிங்கப்பூர் நாணய ஆணையத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவிருக்கும் திரு தர்மன், 13ஓ, 13யூ பிரிவுகளின்கீழ் வரி ஊக்கத்தொகைக்கு விண்ணப்பித்த குடும்ப அலுவலகங்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் அந்த விவரங்கள் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்