தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல மணி நேரம் வரிசையில் நின்று நுழைவுச்சீட்டு வாங்கிய ரசிகர்கள்

1 mins read
c099fe85-fda4-46f2-973b-2af3e3acbe70
சில சிங்போஸ்ட் நிலையங்களில் கிட்டத்தட்ட 17 மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட் ஆறு கலைநிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளார்.

அதற்கான நுழைவுச்சீட்டுகள் வெள்ளிக்கிழமையன்று சிங்போஸ்ட் அஞ்சல் நிலையங்களில் விற்கப்பட்டன.

ஏற்கெனவே ஜூலை 5ஆம் தேதி யுஓபி கடனட்டை வைத்திருப்போருக்குப் பிரத்தியேகமாக நடத்தப்பட்ட நுழைவுச்சீட்டு விற்பனையில் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன.

அதனால் சிங்போஸ்ட் நிலையங்களில் நுழைவுச்சீட்டுகளை வாங்க ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். சில நிலையங்களில் கிட்டத்தட்ட 17 மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

உட்லண்ட்ஸ் சிவிக் சென்டரில் உள்ள சிங்போஸ்ட் நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் தானும் தன் காதலியும் வரிசையில் நிற்கத் தொடங்கியதாக லேராய் எங் என்பவர் சொன்னார். காதலர்கள் 6,200 வெள்ளி கொடுத்து எட்டு நுழைவுச்சீட்டுகளை வாங்கினர்.

சிராங்கூன் சென்ட்ரலில் உள்ள சிங்போஸ்ட் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அங்கு வரிசையில் நின்ற ரசிகர்கள் நுழைவுச்சீட்டுகள் கிடைக்காமல் ஏமாற்றத்தில் வீடு திரும்பினர். 

டிக்கெட்மாஸ்டர் இணையத்தளம் வழியாகவும்  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நுழைவுச்சீட்டுகளை வாங்கினர். இருப்பினும், ரசிகர்கள் பலரும் இணையத்தளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தங்களால் நுழைவுச்சீட்டுகள் வாங்க முடியவில்லை என்று சமூக ஊடகங்கள் வழியாகப் புகார் தெரிவித்தனர்.

தேசிய விளையாட்டரங்கில் 2024ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் மார்ச் 4 வரையும், மார்ச் 7 முதல் மார்ச் 9 வரையும் ஆறு இரவுகளுக்கு டெய்லர் சுவிஃப்டின் கலைநிகழ்ச்சி நடைபெறும். 

குறிப்புச் சொற்கள்