தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் காற்பந்து நிலையை மேம்படுத்த பத்து அம்சத் திட்டம்

3 mins read
f083c070-1ce0-4710-ad09-d461e57c1291
தென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஆண்கள் காற்பந்தாட்டத்தில் சிங்கப்பூர் 7-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது. - படம்: சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் (சீ விளையாட்டுகள்) பங்கேற்கும் சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுக்களுக்கு ஒரு மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் பத்து அம்சம் கொண்ட பரிந்துரைகளை அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வுக்குப் பிறகு இந்தப் பரிந்துரைகளை சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

முன்னாள் தேசிய காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜித்தா சிங், சிங்கப்பூர் காற்பந்துச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களான ரசாலி சஆட், லிம் டொங் ஹாய், ஹர்மான் அலி ஆகியோரைக் கொண்ட மறுஆய்வுக் குழுவை சங்கம் நியமித்தது.

சீ விளையாட்டுகளில் சிங்கப்பூர் அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு வந்ததுடன் மிக மோசமாக பரமவைரியான மலேசியாவிடம் 7-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு, அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது.

நான்கு பேரைக் கொண்ட மறுஆய்வுக் குழு நான்கு வாரங்களுக்குப் பிறகு தனது பரிந்துரைகளை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திடம் சமர்ப்பித்தது.

குழுவின் தனிப்பட்ட அறிக்கை தொடர்பில் விவாதங்கள் நடைபெற்றன. இனி சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் தனது தேசிய குழுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு இந்தப் பத்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்.

முதலாவதாக, 22/23 வயதுக்கு உட்பட்ட குழுக்கள், இனி தேசிய காற்பந்துக் குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு, முதல்நிலை தேசிய குழுவின் பயிற்றுவிப்பாளரின் கீழ் செயல்படும். இதன் மூலம் அந்தப் பிரிவுகளில் சிறப்பாக ஆடும் ஆட்டக்காரர்கள் முதல்நிலை குழுவுக்கு உயர்த்தப்படுவார்கள்.

இரண்டாவதாக, ஒவ்வொரு சீ விளையாட்டும் ஈராண்டுத் திட்டமாக வகைப்படுத்தப்படும். இதன் மூலம் முதல்நிலைக் குழுவின் பயிற்றுவிப்பாளர், சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் விளையாடும் யங் லயன்ஸ் குழுவுக்குப் பொறுப்பு வகிப்பார்.

அந்தக் குழு ஒவ்வொரு சுழற்சிக்கும் எட்டு முதல் பத்து அனைத்துலக ஆட்டங்களில் பங்கேற்கும். 2023 குழுவில் உள்ள ஆட்டக்காரர்களில் எழுவருக்கு மட்டுமே அனைத்துலக ஆட்டங்களில் பங்கேற்ற அனுபவம் இருந்தது.

மூன்றாவதாக, ஈராண்டு சுழற்சி சீ விளையாட்டு திட்டத்துக்கு அதிக ஆட்டக்காரர்களைக் கொண்ட நீண்ட பட்டியல் உருவாக்கப்படும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் இருக்கும். இந்தத் திட்டம் ஒரு போட்டிக்கு முன்னர், மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நடப்புக்கு வரும்.

நான்காவதாக, தேசிய சேவை மற்றும் பள்ளி தொடர்பான கடப்பாடுகளைக் கொண்ட 22/23 வயதுக்கு உட்பட்ட குழுக்களுக்கு, சீ விளையாட்டுகள், ஏஎஃப்சி 23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்றுகள் ஆகியவற்றில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும்.

இதர போட்டிகள் அனைத்தும் விளையாட்டாளர் மேம்பாட்டு வாய்ப்புகளாகக் கருதப்படும்.

ஐந்தாவதாக, 22/23 வயதுக்கு உட்பட்ட குழுக்களின் ஆட்ட நேரத்தை அதிகரிக்க, சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

ஆறாவதாக, 22/23 வயதுக்கு உட்பட்ட குழுக்கள் முக்கியமான போட்டிகளில் கலந்துகொள்வதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தயார்நிலைப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம், பிரிமியர் லீக் ஆட்ட திட்டமிடலில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

ஏழாவதாக, குழு ஆட்டக்காரர்களை மனத்தளவில் தயார்படுத்துதலும் குழுவைப் பலப்படுத்துதலும் கட்டாயமாக்கப்படும்.

எட்டாவதாக, ஆட்டக்காரர்களின் உணவுமுறையும் திட்டமிடப்படும்.

ஒன்பதாவதாக, எதிரணிக் குழுவின் உத்திகளைப் பகுப்பாய்வு செய்தல், ஆட்டத்துக்குப் பிந்திய பகுப்பாய்வறிக்கை தொடர்பில் தேசிய குழுவுக்கு அவ்வப்போது தகவல் அளிக்கப்படும்.

பத்தாவதாக, ஆட்டத்தின்போது ஏற்படும் அனைத்துக் காயங்களும் ஒரு மருத்துவரால் சரிபார்க்கப்பட்டு, உறுதி செய்யப்படும். ஆட்டக்காரர்கள் பயிற்சியின்போது முன்னரே விடைபெறுவதற்கு தலைமைப் பயிற்றுவிப்பாளர் அனுமதி அளிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்