அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்ற பணப்பட்டுவாடா நடைமுறையில் பாட்டாளிக் கட்சியின் தலைவி சில்வியா லிம், கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங் இருவரும் அலட்சியமாக இருந்து இருக்கிறார்கள் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
அதேவேளையில், பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் இந்த விவகாரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
பட்டாளிக் கட்சித் தலைவர்களும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் கவுன்சிலர்களாக இருந்தவர்களும் S$33.7 மில்லியன் நகர மன்ற நிதியைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுவதன் தொடர்பில் நீண்டகாலமாக சிவில் வழக்கு நடந்து வருகிறது.
அதில் புதிதாக இப்போது மேல்முறையீட்டு தீர்ப்பு இடம்பெறுகிறது.
அந்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தனது முடிவுகளை வெளியிட்டது. நகர கவுன்சிலர்களும் ஊழியர்களும் அலட்சியமாக இருந்து நிர்வாக முறையில் கட்டுப்பாட்டு தவறுகளை அனுமதித்துவிட்டார்கள் என்பதை நீதிமன்றம் மறுஉறுதிப்படுத்தி இருக்கிறது.
இந்தத் தவறுகள் முரண்பட்ட தரப்புகள் சம்பந்தப்பட்டு இருந்ததன் மூலம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரெட் பவர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்துக்கு ஒரு புதிய குத்தகையை, அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் வழங்கியன் தொடர்பில் அலட்சியமாக இருந்ததற்காக திருவாட்டி லிம் செங்காங் நகர மன்றத்திற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விசாரணை நீதிபதி அளித்த இதர அனைத்து தீர்ப்புகளையும் மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
பாட்டாளிக் கட்சியின் மூன்று தலைவர்களும் பொறுப்பானர்கள் என்றும் அவர்களின் நேர்மை மீது அதிகளவுக்கு ஐயம் ஏற்பட்டு இருப்பதாகவும் விசாரணை நீதிபதி தெரிவித்து இருந்தார்.
செங்காங்கில் 2020 பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றத்திற்கு உட்பட்ட வட்டாரம் தொடர்பான சொத்துகளும் பொறுப்புகளும் செங்காங் நகர மன்றத்திடம் மாற்றி ஒப்படைக்கப்பட்டன.
பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த பகுதி செங்காங் நகர மன்றத்துடன் சேர்க்கப்பட்டது.
முன்னதாக பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் பாட்டாளிக் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் இருந்த அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் பொங்கோல் ஈஸ்ட் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு இருந்தது.
செங்காங் குழுத்தொகுதியில் பொங்கோல் ஈஸ்ட், செங்காங் வெஸ்ட், செங்காங் சென்ட்ரல் ஆகியவை உள்ளடங்கும்.
மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுகளை அடுத்து திருவாட்டி லிம்மும் திரு லோவும் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டி இருக்கலாம். அந்தத் தொகை எவ்வளவு என்பது இனி நடக்கும் விசாரணைகளைத் தொடர்ந்து முடிவு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.