பக்தர்கள் பாதம் நோகாமல் காக்கும் பாமரர் பக்தவச்சலம்

பக்தர்கள் பாதம் நோகாமல் காக்கும் பாமரர் பக்தவச்சலம்

4 mins read
சனிக்கிழமை ஒரு சாமானியர்
4fc931ee-df7f-4b6c-8fb4-e67dd12b0ddc
ஆறு அடி நீளம், ஈரடி அகலம், இரு அங்குலம் கணம் உள்ள கல் சுமார் 300 கிலோ எடை இருக்கும் என்றார், திரு பக்தவச்சலம். நான்கு பேர் சேர்ந்து சங்கிலி போட்டு கல்லைத் தூக்கிச் செல்கிறார்கள். - படம்: எம். கே. ருஷ்யேந்திரன்
multi-img1 of 4
Google News Preferred Icon

செஞ்சிக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட திரு பக்தவச்சலம், 59, அதிகம் படிக்காத தான் கோயில்களில் பிரகாரம் சுற்றிவரும் பக்தர்களின் பாதம் நோகாமல் காக்கும் சேவை செய்துவருவதாகக் கூறினார்.

திருநாங்கூர் என்ற பேரூரில் உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் தரையில் கல் பதித்துக்கொண்டு இருந்த திரு பக்தவச்சலம், நாள்தோறும் சராசரியாக ரூ.1,200 சம்பாதிப்பதாகத் தெரிவித்தார்.

“பத்தாம் வகுப்புகூட படிக்கவில்லை. 15 வயது பையனாக இருந்தபோதே வீட்டைவிட்டு வெளியேறி நேரே பெங்களூர் போய் அங்கு ஆறு ஆண்டுகள் தங்கி இருந்து இந்தத் தொழிலைக் கற்றேன்.

“கற்களைப் பற்றி தெரிந்துகொண்டு அவற்றை எப்படிக் கையாளுவது, எங்கு எப்படி தட்டினால் எங்கு உடையும் என்ற நுணுக்கங்களை அனுபவம் மூலம் கற்றுக்கொண்டு சொந்தமாகச் செயல்படத் தொடங்கினேன். சிறுசிறு குத்தகைகள் எடுத்து வேலை செய்தேன்.

“கட்டுப்படியாகவில்லை. ஆகையால் ஒப்பந்தக்காரர்களிடம் நாள் சம்பளத்திற்கு வேலை செய்யத் தொடங்கினேன். இன்று வரை அது தொடர்கிறது,’’ என்று தெரிவித்த திரு பக்தவச்சலத்திற்கு மணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் பட்டப்படிப்பு படிக்கிறார்கள். இவரின் குடும்பம் செஞ்சியில் உள்ளது. மனைவி குடும்ப மாது.

“எப்போதுமே வேலை இருக்கும். நாமே விடுப்பு எடுத்துக்கொண்டால்தான் போச்சு. ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை செஞ்சி சென்று குடும்பத்தைப் பார்த்து வருவேன். அவசரம் என்றால் நடுவே போய்வருவேன்,” என்ற திரு பக்தவச்சலம், “இப்போது திருவண்ணாமலையைச் சேர்ந்த மதி ஸ்டோன் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தின்கீழ் இக்கோயிலில் வேலை பார்க்கிறேன்,” என்றார்.

‘‘பூமியின் மேற்பகுதியிலும் அடியிலும் முக்கியமாக மூன்று வகைக் கற்கள் கிடைக்கும். கடினப்பாறை, படிவுப்பாறை, உருமாறிய பாறை என்ற அந்த மூன்று வகைக் கற்களில் தமிழ்நாட்டில் குறிப்பாக கிருஷ்ணகிரி பக்கத்தில் கடினப்பாறை அதிகம்’,’’ என்று அவர் கூறினார்.

“ஆந்திரா, கர்நாடகாவில் படிவுப்பாறை அதிகம். கடினப்பாறைக் கல்லில்தான் சுவாமி சிலைகள், கோயில் தூண்கள் செய்ய முடியும். அது மிகவும் எடை அதிகம், உறுதியானது.

“தரை வேய பெரும்பாலும் பயன்படுவது படிவுப்பாறை கல்தான். இப்போது இந்தக் கோயிலில் தரைக்குப் போடப்படுவது ஆந்திராவில் இருந்து இறக்குமதியான படிவுப்பாறை கல்தான்,” என்று அவர் விளக்கினார்.

உருமாறிய பாறை ஒன்றுக்கும் ஆகாது என்று தெரிவித்த திரு பக்தவச்சலம், “தரையில் கல் போடும்போது இரண்டு கற்களுக்கு இடையில் இலேசான இடைவெளி விட்டு கற்களைப் பதிப்போம். அந்த இடைவெளியில் சிமெண்ட், கோலமாவு (கல்மாவு) இரண்டும் சேர்ந்த கலவையை நிரப்பி கரணையால் அழுத்தி தேய்த்து பூசிவிடுவோம்,” என்று கூறினார்.

“படிவுப்பாறை பூமியின் கீழ்ப்பரப்பில் இருந்து எடுக்கப்படுகிறது. எந்த அளவுக்குக் கணமாகக் கல் வேண்டுமோ அந்த அளவு ஆழத்திற்கு- அதாவது இரண்டு அங்குலம் கணம் என்றால் இரண்டு அங்குல ஆழத்திற்கு, ஓரடி இடைவெளியில் பாறை நெடுகிலும் துளையிடுவார்கள். பிறகு பாறையின் மேற்பரப்பில் மூங்கில் தழை உள்ளிட்ட பல தாவரங்களின் தழைகளைப் பரப்பி கொளுத்துவார்கள்.

“அந்த வெப்பத்தில், குழியின் ஆழத்தைப் பொறுத்து நெடுகிலும் பெயர்ந்து கல் மேலே கிளம்பும். அதை பெரும் பாரந்தூக்கி இயந்திர வாகனத்தைக் கொண்டு தூக்கி இயந்திரத்தில் கொடுத்து இழைப்பார்கள். கல்லின் ஒரு பக்கம் வழவழவென்றும் மறுபக்கம் சொரசொரப்பாகவும் இருக்கும்.

“பிறகு அளவுக்கு ஏற்ப அறுத்து கற்களை எடுப்பார்கள். இரண்டு அடி அகலம், நான்கு அடி நீளம், இரண்டு அங்குல உயரம் உள்ள படிவுப்பாறை கல் ஏறக்குறைய 200 கிலோ எடை இருக்கும். அவை லாரியில் ஏற்றப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்படும்.

‘‘சொரசொரப்பான பக்கம் மேலே இருப்பதுபோல கற்கறைப் பதிப்போம். அப்போதுதான் வழுக்காது. தரையில் போடப்படும் கல் இலேசில் உடையாது. வெப்பத்தைக் கிரகித்துக்கொள்ளும். 100 ஆண்டு தாக்குப் பிடிக்கும்.

‘‘ஆகையால் பிரகாரத்தில் பக்தர்கள் வெயிலில் நடந்து செல்லும்போது பாதம் அவ்வளவாகச் சூடு ஏறாது’,’’ என்று திரு பக்தவச்சலம் மேலும் விளக்கினார்.

பொதுவாக படிவுப்பாறை கற்களைப் பதிக்க சதுர அடி ஒன்றுக்கு ஒப்பந்தக்காரர் ரூ.140 கட்டணம் நிர்ணயிப்பார்.

சம்பிரதாயம் பார்ப்பதால் பொதுவாக படிவுப்பாறை கற்களை வீடுகளுக்குள் போடுவதில்லை. தமிழ்நாட்டில் தஞ்சை, ராமேஸ்வரம், திருநாகேஸ்வரம், திருநாங்கூர், ஆந்திராவில் திருப்பதி முதலான நகர்களில் உள்ள மிகப் பிரபலமான கோயில்களில் நான் வேலை செய்து இருக்கிறேன்.

“ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் சென்று மாதக்கணக்கில் தங்கி பல கோயில்களில் கல் பதித்து இருக்கிறேன். இது ஒன்றுதான் எனக்கு தெரிந்த தொழில்.

“வேலை பார்க்கும் இடங்களில் தங்குவதற்கும் சாப்பாட்டிற்கும் வசதி செய்து கொடுப்பார்கள்,” என்று திரு பக்தவச்சலம் தெரிவித்தார்.

அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, மதி ஸ்டோன் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான திரு ரமேஷ் என்பவரின் மேற்பார்வையின்கீழ் பல ஊழியர்களும் பல அளவுகளில் இருந்த பெரும் பெரும் கற்களைச் சங்கிலியில் கட்டி அவற்றை நான்கு நான்கு பேராக அவற்றைப் பதிக்கக்கூடிய இடங்களுக்குத் தூக்கிச்சென்று வைத்தார்கள்.

“புண்ணியம் தேடி பக்தர்கள் கோயிலுக்குச் செல்கிறார்கள். அத்தகைய பக்தர்களின் பாதம் நோகாமல் காத்து சேவை செய்து அதன்மூலம் நான் புண்ணியம் தேடிக்கொள்கிறேன்.” என்று திரு பக்தவச்சலம் கூறியதைக் கேட்டு அவரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்