வாகனங்களில் சட்டவிரோத திருத்தங்களைச் செய்தவர்கள் அல்லது அளவுக்கு அதிகமாகச் சத்தம் வரும்படி மாற்றங்களைச் செய்தவர்கள் குறைந்து இருக்கிறார்கள்.
கடுமையான விதிமுறைகளும் அமலாக்க நடைமுறைகளுமே இதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையம் சென்ற ஆண்டில் வாகனங்களில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்ததன் பேரில் 1,215 பேருக்கு அழைப்பாணைகளை அனுப்பியது.
இந்த எண்ணிக்கை 2021ல் 1,781 ஆகவும் 2020ல் 1,650 ஆகவும் இருந்தது.
ஆகையால், சென்ற ஆண்டில் நிலைமை கொஞ்சம் மேம்பட்டு இருப்பதாக தெரியவருகிறது.
அதேபோல, தேசிய சுற்றுப்புற வாரியம் சென்ற ஆண்டில் வாகன இரைச்சல் தொடர்பில் 85 விவகாரங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றது. இந்த எண்ணிக்கை 2021ல் 175 ஆகவும் 2020ல் 190 ஆகவும் இருந்தது.
சென்ற ஆண்டில் 66 வாகனங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை 2021ல் 76 ஆகவும் 2020ல் ஒன்பதாகவும் இருந்தது.
இரைச்சல் தரங்களுக்கு உட்பட்டு நடக்கத் தவறியதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ திங்கள்கிழமை அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போவுக்கு அளித்த எழுத்து மூலமான நாடாளுமன்ற பதிலில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
தேசிய சுற்றுப்புற வாரியம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாகன இரைச்சல் தரம் தொடர்பில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியது.
புதிய வர்த்தக வாகனங்களுக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இரைச்சல் தரங்கள் கடுமையாக்கப்படும்.
ஒருவர் இரைச்சல் தரத்தை முதல்முதலாக மீறி குற்றம் செய்தால் அவருக்கு $2,000 வரை அபராதம் விதிக்க முடியும். மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதேபோல வாகனங்களில் சட்டவிரோதமான திருத்தங்களைச் செய்து பிடிபடுவோருக்கு, முதல்முறை குற்றம் செய்திருந்தால் 2021 ஜூலை முதல் $1,000 அபராதம் விதிக்க முடியும்.
அவர்களுக்கு $5,000 வரை அபராதம், மூன்று மாதம் வரை சிறைத்தண்டனை கிடைக்க இப்போது சட்டத்தில் இடமுண்டு.
மீண்டும் யாராவது அதே குற்றத்தைச் செய்தால் $10,000 வரை அபராதம், ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

