சிங்கப்பூரின் முதுபெரும் பொருளியல் வல்லுநரும் தேசிய சம்பள மன்றத்தைத் தோற்றுவித்து 29 ஆண்டுகள் தலைமை தாங்கியவருமான பேராசிரியர் லிம் சோங் யா காலமானார்.
அவருக்கு வயது 91.
மலேசியாவின் மலாக்காவில் பிறந்த அவர், 8 வயதில் தாயை இழந்தவர். அவரது தந்தை கடை உரிமையாளர்.
சிங்கப்பூரில் அமைந்திருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் உபகாரச் சம்பளத்துடன் பொருளியல் பயின்ற பேராசிரியர் லிம் பின்னர் சிங்கப்பூரின் ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என இரண்டு பல்கலைக்கழகங்களிலும் மதிப்புமிகு பேராசிரியர் என்ற சிறப்பை அவர் பெற்றிருந்தார்.
பேராசிரியர் லிம் இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் விட்டுச் செல்கிறார். அவரது மூத்த மகளான வழக்கறிஞர் லீ சுவெட் ஃபெர்ன், சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் இளைய மகனும் பிரமதர் லீ சியன் லூங்கின் தம்பியுமான திரு லீ சியன் யாங்கின் மனைவி.
அவரது இரு மகன்களில் ஒருவரான டாக்டர் லிம் சுவெட் உன், தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர்.

