தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களின் கல்வி செலவுக்கு கைகொடுக்கும் உதவித்தொகை

2 mins read
f2d3e16e-e579-4bf6-921c-993a9d2922ec
உதவித்தொகை பெற்ற மாணவர்கள் சிலருடன் அமைச்சர் சுன் ஷுவெலிங். - இந்து அறக்கட்டளை வாரியம்
multi-img1 of 3

மோனாஷ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பக்கல்வியில் இளங்கலைப் படிப்பு மேற்கொண்டு வரும் 21 வயது கலைவாணி அய்யப்பன் படிப்புக்கு அப்பாற்பட்டு நிதி நெருக்கடியைச் சமாளிக்க முழு நேர வேலையும் பார்த்து வருகிறார்.

தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் இவரின் இரு தங்கைகளின் கல்வி செலவைக் கலைவாணியின் பெற்றோர்கள் இருவரும் கவனித்து வருகின்றனர்.

பெற்றோர் இருவரும் வேலைக்குப் போனாலும் அவர்களுக்கு சிரமத்தை அளிக்காமல் கலைவாணி பல்கலைக்கழக கட்டணச் செலவுக்கும் தாமே பொறுப்பேற்றுள்ளார். சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியம் கல்வி நிதி மூலம் இவர் $4,000 கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார். உதவித்தொகையைப் பல்கலைக்கழக கட்டணச் செலவுக்கும் பயிற்சி வகுப்புகளுக்கும் பயன்படுத்தவுள்ளார், கலைவாணி.

கலைவாணியைப் போலவே, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணினி பொறியியல் பயிலும் விக்ராந்த் சுரேஷ்குமார், 18, உதவித்தொகையைப் பெற்றுக்கொண்டார். பாட்டியின் சுகாதார செலவுகளைத் தனது தந்தை பார்க்க வேண்டிய சூழல் இருப்பதால் இவரின் பள்ளிக் கட்டணத்துக்கு கிடைத்துள்ள $1,200 பேருதவியாக இருக்கவுள்ளது.

பெற்றோர்களுக்கு சுமை அளிக்காத வகையில் விக்ராந்த் சொந்த செலவுக்கு வார இறுதிகளில் சிறுவர்களுக்கு எந்திரனியல் கற்றுத் தந்து பணம் ஈட்டுகிறார்.

இவர்களைப் போலவே தொழில்நுட்ப கல்விக் கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பொது, தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை சேர்ந்த 96 இந்து உயர்கல்வி மாணவர்களுக்கு சனிக்கிழமை பிற்பகல் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியம் கல்வி உதவித்தொகை கிடைத்தது.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் பிஜிபி மண்டப வளாகத்தில் இடம்பெற்ற உதவித்தொகை விழாவில் உள்துறை அமைச்சுக்கும், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்குமான துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார்.

உயர்கல்வி மாணவர்களின் கல்வி செலவுகளுக்காக 2013ல் தொடங்கப்பட்ட இந்த உதவித் திட்டம் மூலம் பல மாணவர்கள் பயன் கண்டுள்ளனர்.

ஒற்றைப் பெற்றோருடன் வாழும் 17 வயது ஜென்வி சுந்தர், $1,000 உதவித்தொகை பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார்.

தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் படிக்கும் அவர், “என்னுடைய அப்பா நான் சிறு வயதில் இருக்கும் போதே இறந்துவிட்டார். என்னையும் என் சிறப்பு தேவையுடைய தம்பியையும் என் அம்மா தான் பார்த்துக் கொள்கிறார். இந்தப் பணம் எனது பள்ளிக் கட்டணத்துக்கு கை கொடுக்கும்.” என்றார்.

எதிர்காலத்தில் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயில வேண்டுமென்ற வேட்கை கொண்டுள்ளார் விக்னேஷ் நாயகன், 26. தற்போது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக பொது ஆய்வுகள் படிக்கும் அவர் பகுதி நேரமாக வேலை பார்க்கிறார்.

வேலையையும் படிப்பையும் சமாளித்து வரும் விக்னேஷ், “பள்ளி மூலம் எனக்கு இந்த உதவித்தொகை பற்றி தெரியவந்தது. எனது பெற்றோர்கள் இருவரும் வேலை பார்த்தாலும் எனக்கு 25 வயதில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு தங்கையும் இருப்பதால், கிடைத்துள்ள $1,500 நிதி உதவி பெற்றோர்களின் பாரத்தைக் குறைக்கும்.” என்று நம்புகிறார்.

குறிப்புச் சொற்கள்