சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஏட்ரியன் டான் காலமானார். அவருக்கு வயது 57.
திரு டான் ஓராண்டுக்குமேல் புற்றுநோயால் அவதிப்பட்டார். அவரது மறைவு குறித்து சனிக்கிழமை மாலை, வழக்கறிஞர் சங்கம் தகவல் வெளியிட்டது.
“புற்றுநோயுடன் போராடிய காலகட்டம் முழுவதும் திரு ஏட்ரியன் அசாதாரணமான துணிச்சலுடன் விளங்கினார். பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதும் தமது கடமையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தார். தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் எங்களை மகிழ்விக்க அவர் தவறவில்லை.
“சிறந்த தலைவரின் இழப்பு என்ற முறையில் மட்டுமன்றி நம்பகமான ஒரு நண்பரின் மறைவு என்ற முறையிலும் நாங்கள் துக்கம் அனுசரிக்கிறோம்.
“திரு ஏட்ரியனின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் பிறரால் நிரப்ப முடியாத ஒன்று. எங்கள் இதயங்களில் அவரது நினைவு எப்போதும் நீங்காமல் இருக்கும்,” என்று சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சர் கா சண்முகம், “மிக இளைய வயதில் திரு ஏட்ரியன் காலமாகிவிட்டார். நகைச்சுவை உணர்வு நிரம்பிய அவருடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சி தரும். அதீத புத்திக்கூர்மையும் நல்ல இதயமும் படைத்தவர். எனக்கு அவரைப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவரது மறைவு பேரிழப்பு,” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

