தனிநபர் பாதுகாப்பு உத்தரவு (பிபிஓ) கோரும் விண்ணப்பங்களில் 10 விழுக்காடு, தங்கள் பிள்ளைகளிடமிருந்து பாதுகாப்பு கோரும் பெற்றோரிடமிருந்து பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலையாக இருப்பதாகக் கூறப்பட்டது.
குடும்ப நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் இத்தகைய பிபிஓ விண்ணப்பங்களில் ஏறத்தாழ 9 விழுக்காடு, 21க்குக் குறைவான வயதுடைய பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் பாதுகாப்பு கோரிய விண்ணப்பங்கள் என்பது தெரிகிறது.
அண்மையில் பதின்ம வயதினர் சிலர் பெற்றோரைத் தாக்கிய சம்பவங்களைத் தொடர்ந்து இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பெரும்பாலும் ஒரு தரப்பினர் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் கையில் எடுத்துக்கொள்ள விழைவதால் குடும்பத்தில் வன்செயல்கள் நடைபெறுவதாக சமூக சேவகர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் சில சம்பவங்களில் மனஅழுத்தம் தரும் சூழல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் பதின்ம வயதினர் சிலர் பெற்றோரைத் தாக்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

