தோல் நோய்களுக்கு புதுப்புது சிகிச்சைகள்; உலக மாநாட்டில் அறிமுகம்

தோல் நோய்களுக்கு புதுப்புது சிகிச்சைகள்; உலக மாநாட்டில் அறிமுகம்

2 mins read
93ada420-ebd7-4843-a47f-da001bd46690
சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடந்த 25வது உலக தோல் ஆய்வியல் மாநாட்டில் 150 நாடுகளைச் சேர்ந்த 11,400க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரில் கடந்த திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை 25வது உலக தோல் ஆய்வியல் மாநாடு நடந்தது.

அந்த ஆகப் பெரிய நிகழ்ச்சியில் பல வகை தோல் நோய்களுக்கான புதிய சிகிச்சைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் புற்றுநோய்க்கு அடுத்த படியாக தோல் நோய்களுக்குத்தான் புதிய சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன என்று பேராசிரியர் லார்ஸ் பிரெஞ்ச் குறிப்பிட்டார்.

இவர், அனைத்துலக தோல் ஆய்வியல் சங்க அமைப்பின் தலைவராக நான்காண்டு காலம் பதவி வகித்து சென்ற வாரம்தான் அதிலிருந்து விலகிக்கொண்டார்.

இந்த அமைப்புதான் 1889 ஆம் ஆண்டு முதல் உலக தோல் ஆய்வியல் மாநாட்டை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது.

மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க புதுப்புது வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பது பற்றி தெரிந்துகொள்ள அந்த மாநாடு சிறந்த வாய்ப்பை வழங்கி வருகிறது என்று பேராசிரியர் லார்ஸ் குறிப்பிட்டார்.

உலகில் வசிக்கும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏதோ ஒரு வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தோல் நோய்களில் உயிரை போக்கக்கூடிய புற்றுநோய்களும் சிறுசிறு சிராய்ப்பு, அரிப்பு போன்ற நோய்களும் அடங்கும்.

சிறுசிறு தோல் நோய்கள்கூட மக்களை மற்றவர்களிடம் இருந்து தனித்திருக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திவிடும். இதனால் அவர்களிடத்தில் மனச்சோர்வு ஏற்பட்டுவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று பேராசிரியர் விளக்கினார்.

சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடந்த அந்த மாநாட்டில் 150 நாடுகளைச் சேர்ந்த 11,400 பிரமுகர்கள் தோல் பராமரிப்பு தொடர்பிலான ஆகப் புதிய மேம்பாடுகளைப் பற்றி தெரிந்துகொண்டனர்.

விரைவில் சந்தைக்கு வரவிருக்கின்ற மருத்துவ தயாரிப்புப் பொருள்கள் பற்றியும் அவர்கள் தெரிந்துகொண்டனர்.

மருந்து தயாரிப்பு, ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பு துறைகளைச் சேர்ந்தவர்களும் அறிவியல் அறிஞர்களும், மருந்தக வல்லுநர்களும், மருத்துவர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்