சிங்கப்பூரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கம்போங் கிளாம் வட்டாரத்தை உயிரோட்டமிக்கதாக ஆக்கி மேலும் பல வருகையாளர்களை அந்த வட்டாரத்திற்குக் கவர்ந்து ஈர்க்கும் நோக்கத்துடன் ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
அதன்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் அந்த வட்டாரத்தில் அதிகமான கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
அந்த வட்டாரத்தின் பசுமை பெருகும். நடைபாதைகளில் மேன்மேலும் கலைப்படைப்புகள் இடம்பெறும்.
எடுத்துக்காட்டாக, சுல்தான் கேட் பகுதியில் உள்ள திறந்த இடத்தில் விரைவில் திருமணங்கள், சந்தைகள், மேடை நிகழ்ச்சிகள் போன்ற சமூக நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.
கம்போங் கிளாம் வட்டாரத்தின், அதன் மக்களின் பாரம்பரியத்தையும் வரலாற்றுக் கதைகளையும் படம் பிடித்துக்காட்டும் ஓவியங்கள் செப்டம்பர் மாதம் வருகையாளர்களைக் கவரும் வகையில் பல இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும்.
கடந்த கால கம்போங் கிளாம் வட்டாரத்தைச் சித்திரிக்கும் மூன்று மாடி உயர சுவரோவியம் அடுத்த மாதம் ஆயத்தமாகிவிடும்.
எண் 92 அராப் ஸ்திரீட் முகவரியில் உள்ள கடைவீட்டின் பிரகாசமான பசுமைநிறச் சுவர் ஏற்கெனவே பிரபலமான இடமாக ஆகி இருக்கிறது.
கம்போங் கிளாம் பகுதிக்குச் செல்வோர் அந்த இடத்தில் நின்று தங்களைப் படம் எடுத்துக்கொள்வது வழமையாகிவிட்டது.
இவை எல்லாம் கம்போங் கிளாம் வட்டாரத்திற்கான ஐந்தாண்டு திட்டத்தின் ஓர் அங்கமாக இடம்பெறுகின்றன.
கம்போங் கிளாம் வட்டார குடியிருப்பாளர்கள், அந்த வட்டார கலாசார அமைப்புகள், நிறுவனங்கள் அடங்கிய கம்போங் கிளாம் குழுமம் என்ற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அந்த ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்டது.
கம்போங் கிளாம் வட்டாரத்தின் எதிர்காலம் பற்றி இரண்டு மாத காலம் பொதுமக்களை ஈடுபடுத்தி கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
அதனையடுத்து அந்தத் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.
தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் எண் 45 சுல்தான் கேட் கடைவீட்டில் ஞாயிற்றுக்கிழமை அந்தத் திட்டம் பற்றி விளக்கினார்.
அந்தத் திட்டத்தின் மூலம் கம்போங் கிளாம் வட்டாரத்தின் தனிச்சிறப்புமிக்க தனித்தன்மைகள் பல ஆண்டு காலம் கட்டிகாக்கப்படும் என்பது நமது நம்பிக்கை என்று அவர் தெரிவித்தார்.
கம்போங் கிளாம் வட்டாரத்தின் பாரம்பரிய தொழில்களும் புதிய நிறுவனங்களும் தொடர்ந்து மதிப்புமிக்கவையாக இருந்து வருகின்றன என்பதை உறுதிப்படுத்துவது அந்த வட்டாரத்தின் முக்கியமான விருப்பமாக இருக்கிறது என்று அந்தக் குழுமத்தின் உறுப்பினரான திரு ஸாக்கி மாருஃப் குறிப்பிட்டார்.


