சாலை விபத்தில் சிக்கிய 39 வயது வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லாரி மோதியதில் அவர் காயம் அடைந்தார் என நம்பப்படுகிறது.
ஜூலை 2ஆம் தேதி நடந்த சம்பவத்தில் தீவு விரைவுச் சாலையில் நடுத்தடத்தில் கட்டுமானப் பணி நடக்கும் இடத்திற்கு வெளிநாட்டு ஊழியர் செல்வதை ‘எஸ்ஜி ரோட் விஜிலன்ட்’ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி காட்டியது. அப்போது அவர்மீது லாரி மோதியது.
எங் நியோ அவென்யூக்குச் செல்லும் பாதைக்கு அருகே சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவு சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இது குறித்து இரவு 11.35 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஊழியர் சுயநினைவுடன் இருந்ததாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
மருத்துவமனையில் ஊழியரின் உடல்நிலை சீராக இருக்கிறது.

