குறைந்த வருமான மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு உதவும் பொருட்டு கடந்த டிசம்பர் மாதம் அரசாங்கம் பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுகளை வழங்கியது.
கடந்த ஆண்டின் பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வின் தாக்கத்தை ஈடுசெய்யும் விதமாக தகுதிபெறும் குடும்பங்களைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் தலா 30 வெள்ளி பெறுமானமுள்ள இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அடுத்த கட்டமாக இந்த பற்றுச்சீட்டுகள் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் காம்கேர் திட்டப் பயனாளிகள் கிட்டத்தட்ட 16,000 பேருக்கு இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. இவை ஏற்கெனவே அவர்கள் பெற்ற பற்றுச்சீட்டுகளுடன் கூடுதலாக வழங்கப்படும்.
தகுதிபெற்ற மற்ற குடும்பங்களும் இணையம் வழி பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுகளுக்கு https://go.gov.sg/ptv எனும் இணையத் தளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள சமூக மன்றங்களை அணுகலாம் என்றும் அமைச்சர் விவரித்தார்.
இந்தப் பற்றுச்சீட்டுகளை முன்னரே பெற்ற பயனீட்டாளர்கள் கூடுதல் உதவி தேவைப்பட்டால் அருகிலிருக்கும் சமூக நிலையத்தின் மூலமாக கூடுதல் பற்றுச்சீட்டு கோரி விண்ணப்பம் செய்யலாம்.
இந்த விண்ணப்பங்களையும் முறையீடுகளையும் வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல்களை போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுகள் பெற்றிருந்தும் மேலும் உதவி தேவைப்பட்டால், அருகில் உள்ள சமூக மன்றத்துக்குச் சென்று இன்னொரு பற்றுச்சீட்டுக்கு வி்ண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.


