தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தை அடுத்து கால்வாயில் சிக்கித் தவித்த இருவரை மீட்ட வெளிநாட்டு ஊழியர்

2 mins read
46919d5d-ec37-4143-990d-fd7ea02dea04
விபத்தைத் தொடர்ந்து கால்வாய்க்குள் விழுந்து கிடந்த கார் மீட்கப்படுகிறது. - படம்: ஷின் மின்

மற்றொரு வாகனத்துடன் விபத்துக்குள்ளான கார் ஒன்று, புக்கிட் தீமாவில் உள்ள கால்வாயில் விழுந்ததைத் தொடர்ந்து அதிலிருந்த மாதும் அவரின் மகனும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

குவீன்ஸ் சாலை, லூதரன் சாலைச் சந்திப்புக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் 12.20 மணிக்கு தங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

குவீன்ஸ் சாலை வழியாக நீல நிற வாகனத்தை அந்த மாது ஓட்டிக்கொண்டிருந்தார். லூதரன் சாலையில் கறுப்பு நிற கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலைச் சந்திப்பில் இரு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதாக அந்த மாதின் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஷின் மின் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

விபத்தின் தாக்கத்தால் பலமுறை புரண்ட நீல நிற வாகனம், தடுப்புவேலிகளை உடைத்துக்கொண்டு கால்வாய்க்குள் விழுந்ததாக அவர் சொன்னார்.

தம் சக ஊழியர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த 35 வயது வெளிநாட்டு ஊழியர் ஒருவர், பலத்த சத்தம் கேட்டதும் என்ன நடந்தது என்பதைப் பார்க்கச் சென்றார்.

“சாலையின் பக்கவாட்டில் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்ததையும் கால்வாயில் மற்றொரு கார் இருந்ததையும் நான் கண்டேன்.

“அந்த மாதும் அந்தச் சிறுவனும் காரிலிருந்து வெளியேறியவுடன், அச்சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டதா என்பதுபற்றி அவரிடம் அந்த மாது கேட்டார். பயத்துடன் காணப்பட்ட அச்சிறுவன் எதுவும் பேசாமல் நின்றான்,” என்று அந்த ஊழியர் கூறினார்.

உடனடியாக கால்வாய்க்குள் குதித்த அவர், அச்சிறுவனைத் தூக்கி கால்வாய்க்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஊழியர்களிடம் ஒப்படைத்தார்.

அந்த மாது கால்வாயிலிருந்து வெளியேற அதற்குள் ஏணி ஒன்றை ஊழியர்கள் இறக்கினர்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணைக்கு 60 வயது பெண் ஓட்டுநர் உதவி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து