ஆசியானின் வெளியுறவு அமைச்சர்களுடன் சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்கள், முக்கிய பங்காளிகள் ஆகியோர் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்வார்கள்.
சிங்கப்பூர் சார்பில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அந்தக் கூட்டங்களில் பங்கேற்பார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
“56வது ஆசியானின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஆசியானின் சமூகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை மறுஆய்வு செய்வதுடன், மாறிவரும் வட்டார சூழ்நிலையில் ஆசியானின் மையத்தையும் ஒற்றுமையையும் மறுவுறுதிப்படுத்தும்,” என்று அமைச்சு கூறியது.
“ஆசியானின் பெருந்தொற்று காலத்துக்குப் பிந்திய மீட்சி பற்றியும் பொருளியல் ஒருங்கிணைப்பு பற்றியும் இந்தோனீசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நீண்டகால வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உறுதிசெய்யும் ஆசியானின் அடிப்படை நோக்கத்தைப் பலப்படுத்தவும் அமைச்சர்கள் விவாதிப்பார்கள்,” என்றும் வெளியுறவு அமைச்சு விவரித்தது.
ஆசியானின் திடத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கிய இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி, அப்போதுதான் இவ்வட்டாரத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காக்கும் ஆசியானின் மைய பங்கு மேலும் பலம் பெறும் என்றார்.
“உக்ரேன் போர் இன்றும் தொடர்கிறது. அது கொவிட்-19 பெருந்தொற்று காலத்துக்குப் பிந்திய மீட்சிக்கு பெரும் இடையூறாக உள்ளது. அது குறித்து அனைத்துலக அளவில் நடைபெறும் எல்லா கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் பேசப்படுகின்றன,” என்றும் திருவாட்டி மர்சுபி கடந்த வெள்ளிக்கிழமை ஜகார்த்தாவில் கூறினார்.
இந்தக் கூட்டங்களில் 29 நாடுகள், ஆசியான் செயலகம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து 1,165 பேராளர்களும் 493 செய்தியாளர்களும் கலந்துகொள்ள பதிந்துகொண்டுள்ளனர் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது.
ஆசியானின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு வழக்கமாக வெளியிடப்படும் கூட்டறிக்கை, இந்தக் கூட்டத்துக்குப் பிறகும் வெளியிடப்படும். இம்முறை ஆசியானின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு திமோர் லெஸ்டே முதல் முறையாகப் பங்கேற்கிறது. கடந்த ஆண்டு அதற்கு ஆசியான் பார்வையாளர்கள் அந்தஸ்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பொருளியல் ஒத்துழைப்பு பற்றிய பேச்சுகள், வட்டார மற்றும் உலகளாவிய சவால்களுக்கு ஆசியானின் ஒருங்கிணைந்த பதில்கள் ஆகியவற்றைத் தவிர, இந்தக் கூட்டங்களில் மீண்டும் முக்கிய அம்சமாக, மியன்மாரில் நிலவும் சூழ்நிலை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு மே மாதம் 10, 11ஆம் தேதிகளில் இந்தோனீசியாவின் லாபுவான் நகரில் நடைபெற்ற 42வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் ஆசியான் தலைவர்கள், கூட்டாக மியன்மாரின் அமைதித் திட்டம் குறித்து மீண்டும் வலியுறுத்தினர்.
ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், இவ்வாரத்தில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, ரஷ்யா, தென்கொரியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்திப்பார்கள்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு அமைச்சர் சின் காங், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் ஆகிய அனைவரும் ஜகார்த்தாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

