தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியா பெருவிரைவு ரயில் நிலையத்தில் புதிய மின்படிக்கட்டுகள்

2 mins read
cbbeefcb-758f-4f34-af32-c764c5ac5ce1
லிட்டில் இந்திய பெருவிரைவு ரயில் நிலையத்தின் வெளிவழி இ-யில் (Exit E) நடைபெறும் பணிகள் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 5

ரயில் பயணிகளுக்கு உதவும் விதமாக லிட்டில் இந்தியா, தோ பாயோ ஆகிய பெருவிரைவு ரயில் நிலையங்களின் வெளிவழிகளில் புதிய மின் படிக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ரயில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறுகின்றன.

மூத்தோர், குழந்தைகள் உள்ளிட்ட பல பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாக இந்த இடங்களில் முன்னர் இருந்த சாதாரண படிக்கட்டுகள் தற்போது மின்படிக்கட்டுகளாக மேம்படுத்தப்படுகின்றன. 

இந்த ஆண்டின் முற்பகுதியில் தொடங்கிய ‘லிட்டில் இந்தியா’ பெருவிரைவு ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் பாதையில் (Exit E) இடம்பெறும் மின்படிக்கட்டுப் பணிகள் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்றும் தோ பாயோ பெருவிரைவு ரயில் நிலையத்தின் வெளியே செல்லும் பாதையில் அமையும் (Exit C) மின்படிக்கட்டுப் பணிகள் அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டிற்குள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார். 

இது குறித்து கருத்துரைத்த லிட்டில் இந்தியா பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் முருகேசன் சுப்பிரமணியன், 43, “கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக இப்பணிகள் நடந்து வருவதால் அவ்வழியைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் அருகில் இருக்கும் வெளியேறும் வழியில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. மின்படிக்கட்டுப் பணிகள் விரைவில் நிறைவடைந்தால் மிகுந்த உதவியாக இருக்கும்,“ என்று கூறினார்.  

இல்லத்தரசியான காயத்திரி ராஜேஷ், 34, “பெரும்பாலும் லிட்டில் இந்தியாவிலிருந்து காய்கறிகள் உள்ளிட்ட பல பொருள்களை அடிக்கடி வாங்கிச் செல்வோம். அப்போது படிகளில் இறங்குவது மிகுந்த சிரமமாக இருக்கும். இந்த மின்படிக்கட்டுகள் விரைவில் வந்தால் பல வகையில் பயணத்தை எளிமையாக்கும்,“ என்று கூறினார்.

லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து வெளியேறும் பாதையில் மேல்செல்லும் மின்படிக்கட்டு அமைக்கப்படுகிறது.
லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து வெளியேறும் பாதையில் மேல்செல்லும் மின்படிக்கட்டு அமைக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்