ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின்போது பொருத்தமில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம்மிடம் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
திரு டான் தனிப்பட்ட முறையில் சொன்ன அந்தக் கருத்து ஒலிவாங்கியில் பதிவானது.
அந்த அமர்வின் குரல்பதிவு இணையத்தில் வலம் வந்ததாக செவ்வாய்க்கிழமை காலை திரு டான் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். அந்தத் தருணத்தை தம்மால் நினைவுகூர முடியாததால் அந்தக் குரல்பதிவை தாம் கேட்க வேண்டியிருந்ததாக அவர் சொன்னார்.
ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த அதிபரின் உரை மீதான முதல் நாள் விவாதத்தின்போது திரு டான் கூறிய அந்தக் கருத்து ஒலிவாங்கியில் பதிவானது.
சிங்கப்பூர் குறைந்த வருமானப் பிரிவினருக்கு உதவுவது குறித்து இணைப் பேராசிரியர் லிம் சுமார் 20 நிமிடம் ஆற்றிய உரைக்குப் பிறகு திரு டான் அந்தக் கருத்தைத் தனிப்பட்ட முறையில் கூறினார்.
அதிகாரபூர்வ வறுமைக்கோட்டை அமைப்பது குறித்து பேராசிரியர் லிம் தமது உரையில் பரிந்துரைத்து இருந்தார்.
“உரைகளை நான் கேட்கும்போது, எல்லாரையும் போலவே எனக்கும் கருத்துகள் தோன்றும். நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து. அதை எனக்குள் முணுமுணுத்தேனே ஒழிய வேறு எவரிடமும் கூறவில்லை,” என்று திரு டான் தமது ஃபேஸ்புக் பதிவில் விளக்கினார்.
“எனினும், அதை நான் வெளிப்படையாக கூறியிருக்கக்கூடாது அல்லது பொருத்தமில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கக்கூடாது. பேராசிரியர் லிம்மிடம் நான் பேசி அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். அதை அவர் கனிவன்புடன் ஏற்றுக்கொண்டார்,” என்றார் திரு டான்.