முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் துறைமுகக் கலன்; வடிவமைப்பைத் தாக்கல் செய்ய அழைப்பு

2 mins read
cb915229-0498-4ca4-b6f9-2d57030a3f8c
மின்சாரத்தில் இயங்கும் துறைமுகக் கலன்களை உருவாக்க உதவியாக பசுமை நிதித்திட்ட வழிகள் நடப்புக்குவர இந்த முயற்சி வகைசெய்யும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் துறைமுகக் கலனை வடிவமைத்து உருவாக்குவதற்கான யோசனைகளில் நாட்டம் உள்ளவர்கள் அவற்றைத் தாக்கல் செய்யலாம் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அறிவித்து உள்ளது.

தெரிவிக்கப்படும் யோசனைகளை, முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய கலனைச் சிக்கன செலவில், தலைசிறந்த நிலையில் வடிவமைத்துத் தரும் வகையில் இந்த ஆணையம் மதிப்பட்டு ஆராயும்.

துறைமுகக் கலன் ஆற்றல்மிக்கதாக செயல்படும் வகையில் அதன் வடிவத்திற்கான வடிவமைப்புத் தரங்கள், வழிகாட்டி நெறிமுறைகள்; ஒருங்கிணைந்த மின்கலன் நிர்வகிப்பு முறை; எரிசக்தியைச் சேமிக்கும் பகுதிகள்; அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை யோசனைகளில் அடங்கி இருக்க வேண்டும்.

தாக்கலாகும் வடிவமைப்புகள், உள்ளூர் ஆய்வுகளுக்கு ஆதரவு அளிப்பவையாக இருக்க வேண்டும்.

அத்தகைய ஆய்வுகள் மூலம், பல்வேறு பயனீடுகளுக்கான, முற்றிலும் மின்சாரத்தில் செயல்படும் துறைமுகக் கலன்களைத் தயாரிக்க வழி ஏற்படும்.

சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஒருங்கிணைந்த துறைமுகக் கலன்கள் அடிப்படையிலான வெவ்வேறான தொழில் மாதிரிகளின் வர்த்தக ஆற்றலைப் புலப்படுத்தும் யோசனைகளைத் தாக்கல் செய்யும்படியும் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

துறைமுகக் கலன்களை உருவாக்க பசுமை நிதித்திட்ட வழிமுறைகளை உருவாக்க இந்த நடவடிக்கை அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆணையம், இதன் மூலம் சிறிய துறைமுகக் கலன்களை மின்சாரமயமாக்கும் வகையில் வடிவமைப்பிலும் ஆதரவு முயற்சிகளிலும் ஒருமித்த கவனத்தைச் செலுத்தும்.

சிங்கப்பூர் துறைமுகத்தில் ஏறக்குறைய 1,600 துறைமுகக் கலன்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 400 கலன்கள் சிறிய வகையைச் சேர்ந்தவை.

சிங்கப்பூர் துறைமுகத்தில் செயல்படும் எல்லா துறைமுகக் கலன்களும் 2030ஆம் ஆண்டு முதல் முற்றிலும் மின்சாரத்தில் அல்லது ஹைட்ரஜன் போன்ற கரிமக் கழிவு அற்ற எரிபொருளைக் கொண்டு செயல்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு விரும்புகிறது.

நாட்டம் உள்ள தரப்புகள் இந்த ஆணையத்தின் இணையத்தளத்தில் மேல் விவரங்களைப் பெறலாம். யோசனைகளை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்புச் சொற்கள்