தெமாசெக் அமைப்பிற்கு$7 பில்லியன் இழப்பு

தெமாசெக் அமைப்பிற்கு$7 பில்லியன் இழப்பு

3 mins read
0de10b6c-521b-4fc5-9dbe-d188255a4856
தெமாசெக் அமைப்பின் நிகர முதலீட்டு மதிப்பு ஓராண்டுக்கு முன் சாதனை அளவாக $403 பில்லியனாக இருந்தது. அது $382 பில்லியனாகக் குறைந்துவிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கின் முதலீட்டு மதிப்பு குறைந்துள்ளது. அதன் பங்குதாரர்களுக்கான ஓராண்டு வருவாயும் பூஜ்ஜியத்திற்குக் கீழே இறங்கிவிட்டது.

பணவீக்க உயர்வு, புவிசார் அரசியல் இடர்கள், மெதுவடைந்த பொருளியல் வளர்ச்சி, நிதிச் சந்தைகள் சோர்வு ஆகியவை அதற்குக் காரணங்கள்.

தெமாசெக்கிற்கு சொத்து மதிப்பு தள்ளுபடி உள்ளிட்ட நிகர இழப்பு, மார்ச் 31ஆம் தேதி முடிவுற்ற 2023 நிதி ஆண்டில் $7.3 பில்லியனாக இருந்தது.

அந்த அமைப்பிற்கு 2016ல் $6.7 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு 2023 நிதி ஆண்டில்தான் அது முதல் முதலாக இழப்பைச் சந்தித்து இருக்கிறது.

தெமாசெக் ஓராண்டிற்கு முன் $11 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே ஆகச் சிறந்த அரசாங்க முதலீட்டு நிறுவனங்களில் தெமாசெக்கும் ஒன்றாக இருக்கிறது. அது தனது வருடாந்திர அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

தெமாசெக்கின் நிகர சொத்து மதிப்பு 2023 நிதி ஆண்டில் $382 பில்லியனாகக் குறைந்தது. இந்த மதிப்பு, அதற்கு முந்தைய நிதி ஆண்டில் $403 பில்லியனாக இருந்தது. 2021 மார்ச் முடிவு வாக்கில் அதன் மதிப்பு $381 பில்லியன் என்று அறிவிக்கப்பட்டது.

தெமாசெக்கின் பங்குதாரர்களுக்குக் கிடைத்த வருடாந்திர மொத்த தொகை பூஜ்ஜியத்திற்குக் கீழே மைனஸ் 5.07% ஆகக் குறைந்துவிட்டது. இது ஓராண்டுக்கு முன் 5.81% ஆக இருந்தது.

அதிக வட்டி விகிதம் காரணமாக உலகளாவிய நேரடி முதலீட்டு மதிப்புகள் பாதிக்கப்பட்டுவிட்டன.

குறிப்பாக தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பு, பணப்பட்டுவாடாச் சேவை ஆகிய துறைகளில் இடம்பெற்றிருந்த முதலீடுகளின் மதிப்பு இறக்கம் கண்டது.

தெமாசெக் நவம்பர் மாதம் ஓர் அறிவிப்பு விடுத்தது. எஃப்டிஎக்ஸ் என்ற மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை சந்தை தோல்வியடைந்துவிட்டது. அதில் தான் செய்திருந்த US$275 மில்லியன் (S$369 மில்லியன்) முதலீட்டை தள்ளுபடி செய்துவிட்டதாக தெமாசெக் நவம்பரில் அறிவித்தது.

தெமாசெக்கின் 2023ஆம் நிதி ஆண்டுக்கான முதலீட்டு மதிப்பில் இது சுமார் 0.1% ஆகும்.

தெமாசெக் நிறுவனம் செய்திருக்கும் முதலீடுகள் சிங்கப்பூரர்களுக்கு நன்மை அளிக்கின்றன.

தெமாசெக், அதனுடைய நிகர முதலீட்டு வருவாய் உதவித்தொகை மூலம் வருடாந்திர வரவுசெலவுத் திட்டத்திற்கு உதவுகிறது.

இந்த ஏற்பாட்டின்படி, தெமாசெக் நிறுவனமும் ஜிஐசி என்ற சுயாதிபத்திய சொத்து நிதியமும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் நீண்டகால நோக்கில் உருவாக்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வருவாயில் பாதி வரை அரசாங்கம் செலவிட முடியும்.

இந்த மூன்று அமைப்புகளும் சிங்கப்பூரின் இருப்பை முதலீடு செய்ய அனுமதி பெற்றவை.

சிங்கப்பூர் நாணய ஆணையம் தனக்குச் சாதனை அளவில் $30.8 பில்லியன் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக சென்ற வாரம் அறிவித்தது.

பணவீக்கத்தைக் குறைக்கும் வகையில் ஆணையம் தனது சிங்கப்பூர் நாணயக் கொள்கையை இறுக்கியது. அதனைத் தொடர்ந்து அந்த இழப்பு பற்றிய அறிவிப்பு வெளியானது.

தனக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி விளக்கிய தெமாசெக், கடந்த ஆண்டில் மத்திய வங்கிகள் பல முறை வட்டி விகிதத்தைக் கூட்டினாலும் பணவீக்கம் தொடர்ந்து நிலவி வந்தது என்பதைச் சுட்டியது.

இது ஒருபுறம் இருக்க, தேசியவாதமும் தன்னைப்பேணித்தனமும் அதிகரித்து வந்த ஒரு சூழலில், பல முனைகளிலும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தீவிரமடைந்தன. அமெரிக்கா-சீனா பதற்றம், உக்ரேன்-ரஷ்யப் போர் போன்ற இத்தகைய பதற்றங்கள் காரணமாக, உலகமய வர்த்தக ஏற்பாட்டில் இருந்து கவனம் திசை திரும்பியது.

இந்த உலகமயம்தான் கடந்த 20 ஆண்டு காலத்தில் உலகளவில் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து வந்தது.

அத்தகைய அம்சங்களின் விளைவாக மூலதனச் செலவு அதிகரித்துவிட்டது என்பதை தெமாசெக் சுட்டிக்காட்டியது.

குறிப்புச் சொற்கள்