இஸ்ரேலிய, பாலஸ்தீன தலைவர்களுடன் மூத்த அமைச்சர் டியோ சந்திப்பு

இஸ்ரேலிய, பாலஸ்தீன தலைவர்களுடன் மூத்த அமைச்சர் டியோ சந்திப்பு

2 mins read
1803980b-3a5d-4b45-8d4d-6ea6fcb9dc38
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவைச் சந்தித்துப் பேசினார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
multi-img1 of 2

அரசுமுறை பயணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம் சென்றுள்ள மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் இஸ்ரேலிய, பாலஸ்தீன தலைவர்களை திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

சமரச பேச்சுடன் கூடிய இருநாட்டுத் தீர்வுக்காக சிங்கப்பூரின் நீண்டகால ஆதரவை தமது சந்திப்புகளின்போது திரு டியோ மறுஉறுதிப்படுத்தினார். இது ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்ற தீர்மானங்களுடன் ஒத்து இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை கூறியது.

நீடித்து நிலைக்கக்கூடிய, முழுமையான தீர்வுக்கு சமரச பேச்சுவார்த்தையுடன் கூடிய இருநாட்டுத் தீர்வே சாத்தியமுள்ள ஒரே தெரிவு என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, இஸ்ரேலிய அதிபர் ஐசேக் ஹெர்ஸோக்கையும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவையும் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால உறவுகளை அவர்கள் மறுஉறுதிப்படுத்தினர்.

கடந்த ஆண்டு அக்டோபரில் டெல் அவிவ் நகரில் அமைக்கப்பட்ட சிங்கப்பூர் தூதரகம், செயற்கை நுண்ணறிவு, வேளாண் தொழில்நுட்பம், மின்னிலக்கமயம் போன்ற உருவெடுத்துவரும் துறைகளில் ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கும் என்பதை தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

மூத்த இஸ்ரேலிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய திரு டியோ, இருநாட்டு உறவுகள், வட்டார நிலவரம் குறித்தும் கலந்தாலோசித்ததாக அமைச்சு சொன்னது.

அதே தினம் ரமல்லாவில் பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்ட்டாயேவை திரு டியோ சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூருக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேயான நல்லுறவை இரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தினர்.

ஆற்றலை மேம்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க, கடந்த ஆண்டு அக்டோபரில் ரமல்லாவில் சிங்கப்பூர் பிரதிநிதி அலுவலகம் அமைக்கப்பட்டதை அவர்கள் வரவேற்றனர்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிவாரண, பணி அமைப்புக்கு சிங்கப்பூர் US$50,000 (S$67,100) வழங்கவுள்ளதாக டாக்டர் ஷ்ட்டாயேயிடம் திரு டியோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்