சிறார் பாலியல் கொடுமைக்கு எதிரான ஆசியான் கருத்தரங்கு; சிங்கப்பூர் நடத்துகிறது

சிறார் பாலியல் கொடுமைக்கு எதிரான ஆசியான் கருத்தரங்கு; சிங்கப்பூர் நடத்துகிறது

3 mins read
202ec8c2-7558-4e2b-82a2-44c322339f8d
சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் ஜோனத்தன் கம்ப்லான் (இடது), உள்துறை துணை அமைச்சர் சுன் சூவெலிங் இருவரும் கொடுமைக்கு இலக்காகும் சிறார் உதவி நாடி எப்படி செயல்பட வேண்டும் என்பதை சைகை மூலம் விளக்கினார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

தென்கிழக்கு ஆசியாவில் சிறார் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதையும் அவர்கள் இதர கொடுமைகளுக்கு ஆளாவதையும் எதிர்த்துப் போராடுவதற்காக சிங்கப்பூரில் மூன்று நாள் கருத்தரங்கு நடக்கிறது.

சிங்கப்பூரும் அமெரிக்காவும் அதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

‘சிறாருக்கு எதிரான குற்றச்செயல்கள் ஒழிப்பு வட்டார கருத்தரங்கு 2023’ என்ற அந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு புலன்விசாரணை அமைப்பும் சிங்கப்பூர் காவல்துறையும் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கின்றன. அந்தக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடக்கிறது.

சிங்கப்பூர், அமெரிக்கா நாடுகளையும் இதர ஒன்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சேர்ந்த இந்த விவகாரத்துறை வல்லுநர்கள், புலன்விசாரணை அதிகாரிகள், அரசு சாராத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 150 பேர் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார்கள்.

ஆற்றல்மிகு இணையப் புலன்விசாரணை, கொடுமைக்கு இலக்காவோரிடம் புலன்விசாரணை நடத்தும் நுட்பங்கள் போன்ற தலைப்புகள் கருத்தரங்கில் இடம்பெறும்.

இதனிடையே, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர், சிறார் கொடுமைகளைக் கையாளுவதன் தொடர்பிலான புதிய உத்திகளையும் புலன்விசாரணை நுணுக்கங்களையும் தலைசிறந்த நடைமுறைகளையும் இந்தக் கருத்தரங்கு பகிர்ந்துகொள்ளும் என்று தெரிவித்தார்.

கருத்தரங்கிற்கு அமெரிக்காவின் அனைத்துலக போதைப்பொருள், சட்ட அமலாக்க விவகார இலாகாவும் ஆதரவு அளித்து நிதியும் வழங்குகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உள்துறை துணை அமைச்சர் சுன் சூவெலிங் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் கன்டோன்மெண்ட் வளாகத்தில் நடந்த கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

சிறாருக்கு எதிரான குற்றச்செயல்கள் சிங்கப்பூரிலும் இதர நாடுகளிலும் கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

ஐநாவின் யுனிசெஃப் அமைப்பு 2020ல் வெளியிட்ட ஓர் அறிக்கையை அவர் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுவதும் ஐந்து சிறுமிகளில் ஒருவர், 13 சிறுவர்களில் ஒருவர் 18 வயதை அடைவதற்கு முன்பாகவே பாலியல் ரீதியில் கொடுமைக்கு ஆளாகிறார்கள் அல்லது வேறு வழிகளில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இது அபாயச் சங்கு ஊதுவதாக இருக்கிறது என்று தெரிவித்த துணை அமைச்சர் சுன், சிறார் பாலியல் கொடுமைகள் தொடர்பான படங்களும் தகவல்களும் கணிசமாக அதிகரித்துவிட்டன என்றார்.

இணையம், இதர தொழில்நுட்பம் வழியாக சிறார் பாலியல் கொடுமைகளைப் படம் எடுப்பதும் அவற்றைப் பகிர்ந்துகொள்வதும் உலகளவில் அதிகரித்து இருக்கிறது.

இந்த விவகாரம் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

சிறார் பாலியல் கொடுமைக்கு ஆளாவதையும் இதர வகை குற்றச்செயல்களுக்கு இலக்காவதையும் தடுத்து அவர்களைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளைப் பலப்படுத்தும் நோக்கத்தில் சிங்கப்பூர் தன்னுடைய தண்டனை விதித்தொகுப்பை 2020ல் திருத்தியதையும் திருவாட்டி சுன் சுட்டிக்காட்டினார்.

சிறார் கொடுமைக்கு எதிரான முயற்சிகளில் அனைத்துலக ஒத்துழைப்பு முக்கியமானது என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

இந்தக் கருத்தரங்கு சரியான நேரத்தில் நடப்பதாகத் தெரிவித்த திருவாட்டி சுன், இதன்மூலம் அமெரிக்காவையும் தென்கிழக்காசிய வட்டாரத்தையும் சேர்ந்த சட்ட அமலாக்க அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட பட்டத்தொழிலர்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவரிடம் இருந்து புதுப்புது யோசனைகளைக் கற்றுக்கொள்ள முடியும் என்றார்.

அவற்றைக் கொண்டு சிறாரைப் பாதுகாப்பதற்கான தங்கள் ஆற்றல்களை அவர்கள் பலப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் திருவாட்டி சுன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்