தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்திற்குப் புத்துயிர்; மலேசியா நாட்டம்

2 mins read
fea737a5-12b9-4fd1-a441-d0d6d7751624
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை காட்சிப்படுத்திய நிகழ்ச்சி முன்பு இடம்பெற்றது. - படம்: பெர்னாமா

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடைப்பட்ட அதிவேக ரயில் திட்டத்திற்குப் புத்துயிர் அளிப்பதன் தொடர்பான யோசனைகளைத் தாக்கல் செய்யும்படி உள்ளூர், அனைத்துலக நிறுவனங்களுக்கு மலேசியா கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த ரயில் திட்டம், ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.

மைஹெச்எஸ்ஆர் குழுமம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அதிவேக ரயில் திட்டம் தொடர்பில் கருத்துகளைத் திரட்ட முதன்முறையாக முயற்சி மேற்கொண்டதாகவும் அப்போது ஆக்ககரமான தகவல்கள் கிடைத்ததாகவும் அந்தக் குழுமம் தெரிவித்தது.

அதையடுத்து அந்த அதிவேக ரயில் திட்டத்தை அரசாங்கம், தனியார் துறை இரண்டும் சேர்ந்து உருவாக்கி நடத்தும் வகையில் யோசனைகளை அதிகாரபூர்வமாகத் தாக்கல் செய்யும்படி தனியார் துறைக்குத் தான் கோரிக்கை விடுத்து இருப்பதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டது.

மைஹெச்எஸ்ஆர் நிறுவனம் மலேசியாவின் நிதி அமைச்சுக்குச் சொந்தமானது. அது அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சின்கீழ் செயல்படுகிறது.

அதிவேக ரயில் திட்டத்தை அமைத்து அதை நடைமுறைப்படுத்துவதற்கு அந்தக் குழுமம்தான் பொறுப்பாக இருக்கிறது.

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடைப்பட்ட அதிவேக ரயில் திட்டம் நீண்டகாலப்போக்கில் தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருக்க எந்த அளவுக்கு வளங்கள், ஆற்றல்கள் தேவைப்படும் என்பதையும் அந்தத் திட்டத்தில் ஆர்வம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வதற்காக முதல் கட்டத்தில் கருத்துகள் திரட்டப்பட்டன.

அந்த முயற்சியில் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

அரசாங்கத்திற்கு அந்த ரயில் திட்டம் தொடர்பில் மேலும் பல யோசனைகள் கிடைக்கும் வகையில் இப்போது உள்ளூர், அனைத்துலக நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு யோசனைகள் நாடப்படுகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்திற்கு மலேசிய அரசாங்கம் வலுவான ஆதரவு அளிக்கிறது.

இதற்காக அந்த அரசுக்குத் தான் நன்றி கூறுவதாக அந்தக் குழுமம் குறிப்பிட்டு உள்ளது.

அந்த ரயில் திட்டம் மக்களுக்கு ஏராளமான நலன்களை அளிக்கும் என்பதையும் அந்தக் குழுமம் சுட்டிக்காட்டியது.

பாதுகாப்புமிக்க, வேகமான, செம்மையான, நிலையான புதிய பயண வாய்ப்பை அந்தத் திட்டம் வழங்கும்.

அதோடு மட்டுமன்றி, நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நீண்டகால வளர்ச்சியையும் அது உருவாக்கித் தரும் என்று அந்தக் குழுமத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்