16 வயதுச் சிறுவன் உட்பட 6 பேர் மீது பண மோசடிக் குற்றச்சாட்டு

16 வயதுச் சிறுவன் உட்பட 6 பேர் மீது பண மோசடிக் குற்றச்சாட்டு

2 mins read
1fa4dd2d-008d-4d21-b692-f8924a0e5f5e
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காலகட்டத்தில் 16 வயதுச் சிறுவன் நான்கு வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார். - படம்: பிக்சாபே

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய மோசடி நடவடிக்கைகளில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் ஆறு பேர் மீது புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 16 வயதுச் சிறுவனும் அடங்குவார்.

சிறுவர், இளையர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், 18 வயது நிரம்பாத அச்சிறுவனின் பெயரை வெளியிட அனுமதி இல்லை.

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் யூஓபி வங்கி, ஓசிபிசி வங்கி, எச்எஸ்பிசி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி ஆகியவற்றில் கணக்கு வைத்திருந்தார்.

அவற்றுக்கான இணைய வங்கிச் சேவை விவரங்களை அறிமுகமற்றவர்களுக்கு அவர் நான்குமுறை தந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரிக்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் அச்சிறுவன் அவ்வாறு செய்தார்.

வங்கிகளின் இணையச் சேவைக் கட்டமைப்பில் அனுமதியற்ற செயல்களில் ஈடுபடும் சதித் திட்டத்திலும் அவருக்குப் பங்குண்டு.

கணினியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் அச்சிறுவன்மேல் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

20 முதல் 29 வயது வரையிலான மேலும் நால்வர்மீதும் புதன்கிழமை பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஐவரும் ஜூன் 19ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கணினி நச்சு நிரலைப் பயன்படுத்தி கைத்தொலைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம், பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கிலிருந்தும் மத்திய சேம நிதிக் கணக்கிலிருந்தும் அனுமதியற்ற பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்பட்டது.

புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் 42 வயது முகமது ஃபஸ்லி அப்துல் ஹமீது. அவருக்கும் மற்ற ஐவர் மீதான வழக்கிற்கும் தொடர்பில்லை.

புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்கி, இரண்டு வாரத்திற்கு அதை அறிமுகமற்றோருக்கு $500க்கு வாடகைக்கு விட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி $4,900க்கும் அதிகமான கள்ளப் பணம் நல்ல பணமாக மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆறு பேர் மீதான இரு வழக்குகளும் ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்