பொங்கோல் வட்டார நூலகத்தில் ‘தி லிட்டில் பிரின்ஸ்’ சிற்பம்

பொங்கோல் வட்டார நூலகத்தில் ‘தி லிட்டில் பிரின்ஸ்’ சிற்பம்

2 mins read
83dcda44-e128-4124-bcb6-917dab5eb975
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களுடன் பிரேஷஸ் ஆக்டிவ் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியோர்களும் Skool4 Kidz (ஒன் பொங்கோல்) பாலர் பள்ளி சிறார்களும். - படம்: தேசிய நூலக வாரியம்

பிரான்சின் கலாசாரத்தையும் இலக்கியத்தையும் சிங்கப்பூரர்களிடம் கொண்டுசென்று இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த ‘தி லிட்டில் பிரின்ஸ்’ எனும் பிரெஞ்சு நூல் தொடர்பான சிற்பம் ஒன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. 

‘தி அண்டொய்ன் டீ செயின்ட் எக்ஸ்சுப்பெரி’ இளையர் அறநிறுவனம் தனது எண்பதாவது நிறைவு விழாவைக் கொண்டாட இந்தச் சிற்பத்தை பொங்கோல் வட்டார நூலகத்திற்க்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. 

சிங்கப்பூரிலுள்ள பிரெஞ்சுத் தூதரகமும் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியமும் ஒன்று சேர்ந்து இந்தச் சிற்பத்தை பொதுமக்களுக்குத் திறந்து வைத்தனர். 

அன்பு, நட்பு போன்ற விழுமியங்களை எடுத்துக்கூறும் ‘தி லிட்டில் பிரின்ஸ்’ சிறுவர் நூலில் வரும் கதாபாத்திரத்தை சிற்பம் வடிவில் பிரெஞ்சுச் சிற்பி அர்னாட் நசரே-ஆகா செதுக்கியுள்ளார். பொங்கோல் வட்டார நூலகத்தின் ‘உலகமும் நாமும்’ என்ற சிறுவர்களுக்கான வாசிப்பிடத்தில் இந்தச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. 

முதன்முதலில் 1943இல் வெளியிடப்பட்ட இந்நூல் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய மொழிகளிலும் சிங்கப்பூரர்களுக்குப் பழக்கப்பட்ட சிங்கிலிஷ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

உலகளவில் 480 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலை 60 மொழிகளில் சிங்கப்பூர் நூலகங்களில் இரவல் பெற்று படித்து மகிழலாம்.

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளருமான ராமகிருஷ்ணன் குமரநல்லூர் இந்நூலை ‘குட்டி இளவரசன்’ என்று 2009 இல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். 

நிகழ்ச்சியில் தொலைக்காட்சி பிரபலம், நடிகர் திரு ஹோசேன் லியோங் இந்த நூலின் முதல் மூன்று அத்தியாங்களை உணர்ச்சிபூர்வமாகவும் நகைச்சுவையாகவும் வாசித்து பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெற்றார்.

பொங்கோல் வட்டாரத்தில் வசிப்பவர்களுடன் பிரேஷஸ் ஆக்டிவ் முதியோர் இல்லத்திலிருந்து முதியோர்களும் Skool4 Kidz (ஒன் பொங்கோல்) பாலர் பள்ளியிலிருந்து சிறார்களும் இந்த சிற்பத்தை கண்டு ரசிக்க வந்திருந்தனர். 

மூத்த துணை அமைச்சர், தொடர்பு, தகவல் அமைச்சருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அவருடன் பிரான்ஸ் நாட்டுக்கான சிங்கப்பூர் தூதர் மின்-டி டாங், சிற்பி அர்னாட் நசரே-ஆகா உள்ளிட்ட பிரமுகர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

rachv@sph.com.sg

குறிப்புச் சொற்கள்