குறைந்த வயதுச் சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரைக் கல்வி அமைச்சு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
கென்னத் சியா வெய் யுவான் எனும் அந்த 34 வயது ஆடவர், ஜூலை மாதத் தொடக்கத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் எந்தப் பள்ளியிலும் தற்போது கற்பிக்கவில்லை என்றும் அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
முறையே 14, 15 வயதுடைய சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்டது உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளை சியா எதிர்நோக்குகிறார்.
2023 பிப்ரவரியிலும் மார்ச்சிலும் சுவா சூ காங் வட்டார அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மாடிப்படி அருகே சியா 15 வயதுச் சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இரு சம்பவங்களிலும் ஒரே சிறுமி பாதிக்கப்பட்டாரா என்று தெளிவாகத் தெரியவில்லை.
ஜூன் 26ஆம் தேதி பீஷானில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடிப்படி அருகே 14 வயதான சிறுமியுடன் சியா பாலியல் உறவுகொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தை அவர் காணொளிகளாகப் படமெடுத்ததாகவும் கூறப்பட்டது.
சாங்கி சிறைச்சாலை வளாக மருத்துவ நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சியாவின் வழக்கு ஆகஸ்டு 2ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
ஊழியர்களின் தகாத நடத்தையைத் தீவிரமாகக் கருதுவதாகக் கல்வி அமைச்சு கூறியது. நடத்தை, ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சு தயங்காது என்றும் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படவும்கூடும் என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.