சிங்கப்பூரில் தற்காப்பு, உள்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டது என்பதைப் பரிசோதிக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப முகவையும் உள்துறை அறிவியல் தொழில்நுட்ப முகவையும் அந்தப் பரிசோதனைகளை நடத்தி வருகின்றன.
ஆளில்லா வானூர்திகளும் ஆளில்லா வாகனங்களும் அந்தப் பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அந்த இரண்டு அமைப்புகளும் இந்த விவரங்களை புதன்கிழமை அறிவித்தன.
‘கட்டமைப்புப் பகிர்வு’ என்பது 5ஜி தொழில்நுட்பக் கட்டமைப்புக்கே உரிய ஒரு தனித்தன்மையாகும்.
இந்தக் கட்டமைப்பின் வளங்கள் அதிகமாகப் பகிர்ந்துகொள்ளப்படும்போதும் குறிப்பிட்ட 5ஜி அலைத்தொகுப்புகளைப் பகிர்ந்து அவற்றைக் குறிப்பிட்ட பயனீடுகளுக்கும் சேவைகளுக்கும் ஒதுக்க முடியும்.
இது 5ஜி கட்டமைப்பின் தனித்தன்மையாகும். அதாவது உச்சநேரத்தின்போது பேருந்துகளுக்குத் தடம் ஒதுக்கப்படுவதைப் போல இது செயல்படும்.
இதர அலைத்தொகுப்புகளில் இதர பயனீடுகள் அதிகமாக இடம்பெறும்போது சேவையில் தேக்கம் ஏற்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
அதனால் மிக முக்கியமான பயனீடுகள் பாதிக்கப்படவில்லை என்பதை 5ஜி தொழில்நுட்பத்திற்கே உரிய இந்தத் தனித்தன்மை உறுதிப்படுத்தும்.
ஆளில்லா வானூர்திகளும் தரையில் இயங்கும் ஆளில்லா வாகனங்களும் எடுக்கும் மிகத் தெளிவான நேரடி காணொளிப் படங்களைக் கண்மூடி கண் திறக்கும் வேகத்தில் அனுப்ப 5ஜி கட்டமைப்பு அனுமதிக்கிறது என்பதை இந்த அமைப்புகள் கண்டறிந்துள்ளன.
4ஜி கட்டமைப்பில் இது இயலாத ஒன்றாகும். 5ஜி புதிய நுட்பம் நடைமுறைக்கு வந்தால் இப்போதைய கண்காணிப்பு முறைகள் மிகவும் மேம்படும்.
இப்போதைய முறையில் இணைப்புகளுடன் கூடிய பல படச்சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது நடத்தப்படும் 5ஜி பரிசோதனைகள் உண்மையிலேயே ஒரு தொடக்கம் என்று தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப முகவையின் பிரமுகர் லியூ கியான் சியாங் தெரிவித்துள்ளார்.

