சிங்கப்பூர்: புதிதாக அமைக்கப்படவிருக்கும் மவுண்ட் பிளசண்ட் குடியிருப்புப் பேட்டையில் ஏறக்குறைய 5,000 வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் வீடுகள் (BTO) விற்பனை நடவடிக்கைகளின்மூலம் இந்த வீடுகள் விற்பனைக்கு வரும். மொத்தம் ஆறு விற்பனை நடவடிக்கைகளில் முதலாவது 2025ல் அறிவிக்கப்படும்.
மவுண்ட் பிளசண்ட் வட்டாரத்திலுள்ள முன்னாள் காவல்துறை பயிற்சிக் கழகம், போருக்கு முந்திய காலனித்துவ பங்களாக்கள், சுற்றிலுமுள்ள பசுமைப்பரப்புகள் ஆகியவற்றின் மரபுடைமை அம்சங்களை உள்ளடக்கி புதிய 33 ஹெக்டர் குடியிருப்புப் பேட்டை வடிவமைக்கப்படும் என்று வீவக வியாழக்கிழமை தெரிவித்தது.
பிடாடாரியின் பரப்பளவில் மூன்றில் ஒருபகுதி பரப்பளவைக் கொண்ட மவுண்ட் பிளசண்ட், புக்கிட் பிரவுனுக்கும் மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதிக்கும் அருகில் அமைந்துள்ளது. இதன் மரபுடைமை அம்சங்களைப் பாதுகாத்து, புதிய குடியிருப்புப் பேட்டையில் பயன்படுத்தும் முயற்சிக்கு வழிகாட்ட, ஸ்டூடியோ லாபிஸ் மரபுடைமை ஆலோசனை நிறுவனத்தை வீவக நியமித்துள்ளது.
பழைய பயிற்சிக் கொட்டகையின் தூலக்கட்டுகள், உத்திரங்கள், தூண்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து, புதிய குடியிருப்புப் பேட்டையில் உள்ளடங்குவதும் இதில் உள்ளடங்கும். காவல்துறை பயிற்சிக் கழகத்தில் கட்டப்பட்ட ஆரம்பகாலக் கட்டடங்களில் இந்தக் கொட்டகையும் ஒன்று.
இரும்புக் கூரையமைப்பு கொண்ட இந்தக் கொட்டகை, வெளிப்புறப் பயிற்சி இடமாக வடிவமைக்கப்பட்டது. காவல்துறை நிகழ்ச்சிகள், பதக்கச் சடங்குகள், வாத்தியக்குழு இசைநிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் ஒருகாலத்தில் இது பயன்படுத்தப்பட்டது.
தூண்கள் இல்லாத பரந்த இடப்பரப்பு மழைக்காலத்தில் பயிற்சி இடமாகவும் பயன்பட்டது.
ஸ்டூடியோ லாபிஸ் நிறுவனம் கட்டடத்தைச் சோதனையிட்டு குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் என வீவக தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் காவல்துறை பயிற்சிக் கழகத்தின் மரபுடைமையைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட பணிக்குழு, நீச்சல் குளத்தருகே உள்ள கட்டடங்களுக்குப் புத்துயிரளிக்கலாம் என்றும் பரிந்துரைத்தது.
ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் 1977 பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகளுக்கு அடிப்படை நீச்சல் கற்றுத்தரப்படவேண்டும் என்று அப்போதைய பிரதமர் லீ குவான் இயூ 1972ல் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டது.
வாரநாட்களில் பயிற்சியாளர்களும் காவல்துறை அதிகாரிகளும் பயன்படுத்திய நீச்சல் குளம், வார இறுதியிலும் மாலை நேரங்களிலும் காவல்துறை உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் திறந்துவிடப்பட்டது.
முன்னாள் காவல்துறை பயிற்சிக் கழகத்தில் ஒரு சிறிய நீச்சல் குளமும், உடைமாற்ற இரண்டு மாடிக் கட்டடமும், பன்னோக்கு மண்டபமும் இருந்தன.
மவுண்ட் பிளசண்ட் வட்டாரத்தில் ஆறு கட்டடங்கள் பாதுகாக்கப்படும் என்று வீவக முன்னதாக அறிவித்திருந்தது. அவற்றில் நான்கு கட்டடங்கள் (1, 2, 27, 28) புதிய குடியிருப்புப் பேட்டையுடன் ஒருங்கிணைக்கப்படும். குடியிருப்புப் பேட்டைக்கு வெளியிலுள்ள மீதி இரு கட்டடங்களும் (13, 153) பழமைப் பாதுகாப்புக்கு உட்படும்.
தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையில் கட்டப்படும் மவுண்ட் பிளசண்ட் பெருவிரைவு ரயில் நிலையம், புதிய பேட்டையின் குடியிருப்பாளர்களுக்கு சேவை வழங்கும்.
மவுண்ட் பிளசண்ட் குடியிருப்புப் பேட்டைக்கான மரபுடைமை ஆய்வுகள் 2018ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிட்டதாக வீவக தெரிவித்தது.

