டாக்டர் விவியன்: சூச்சி அம்மையாரை ஆசியான் சந்திக்க வாய்ப்பு தேவை

டாக்டர் விவியன்: சூச்சி அம்மையாரை ஆசியான் சந்திக்க வாய்ப்பு தேவை

2 mins read
906e1692-8fce-42bb-b35d-b7b6687961ec
தென்கிழக்கு ஆசியா எந்தத் தரப்பு பக்கமும் சாயாமல் நடுநிலை அமைப்பாக திகழ்கிறது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

மியன்மாரில் அமைதியை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கும் ஆசியானின் ஐந்து அம்ச இணக்கத் திட்டம் இன்னமும் முக்கியமான ஒன்றாகத் தொடர்கிறது.

அதன்படி, அந்த அமைதி முயற்சியில் மியன்மாரின் தலைவியான ஆங் சான் சூச்சி அம்மையார் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் எட்டுவதற்கு தனக்கு வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஆசியான் கோரி வருகிறது.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் ஒரு வார காலம் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தினர்.

அதற்குப் பிறகு உள்ளூர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசினார். திருவாட்டி சூச்சி அம்மையார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்கெனவே சிங்கப்பூர் விடுத்து இருக்கிறது என்பதை சுட்டிய அவர், மியன்மாரில் நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் திருவாட்டி சூச்சி அம்மையாரையும் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

திருவாட்டி சூச்சி அம்மையார் 33 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் வியாழக்கிழமை கூட்டுப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சரின் இக்கருத்துகள் இடம்பெற்று இருக்கின்றன.

மியன்மாருடன் கூடிய தாய்லாந்தின் அண்மைய நடவடிக்கைகள் ஆக்ககரமான ஒரு மேம்பாடு என்று பல ஆசியான் நாடுகளும் தெரிவிப்பதாக அந்தப் பிரகடனம் குறிப்பிட்டு இருக்கிறது.

தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் டோன் பிரமுத்வினாய் பதவி விலகுகிறார். அவர் புதன்கிழமை ஒரு தகவலை வெளியிட்டார்.

திருவாட்டி சூச்சி அம்மையாரை ஞாயிற்றுக்கிழமை தான் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார். திரு டோனின் அந்தச் சந்திப்பு பற்றி கேட்டபோது கருத்து கூறிய டாக்டர் பாலகிருஷ்ணன், அந்தப் பயணம் ஆசியான் பயணம் அல்ல என்றும் அது தாய்லாந்து அமைச்சர் தனிப்பட்ட முறையில் சொந்தமாக மேற்கொண்ட ஒன்று என்றும் கூறினார்.

திருவாட்டி சூச்சி அம்மையார் இரண்டரை ஆண்டு காலமாக சிறையில் இருந்து வருகிறார். ஊடகத்துடன் தொடர்புகொள்ள அவரால் இயலவில்லை என்பதை சுட்டிய அமைச்சர், மியன்மார் நெருக்கடியைத் தீர்க்க இடம்பெறக்கூடிய எந்தவொரு தீர்வுக்கும் திருவாட்டி சூச்சி அம்மையார் முக்கியமானவர் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்