சிங்கப்பூரின் நிர்வாக முறை ஒளிவுமறைவு இல்லாதது. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் பணிகளைத் தடுக்கும் பிரதமர் சிங்கப்பூரில் ஒருபோதும் இருந்ததில்லை என்று முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் சனிக்கிழமை தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கும் திரு தர்மன், சனிக்கிழமை டெக் வாய் தொகுதியில் மக்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையில் உதவி வருகிறார்.
இது பற்றி ஊடகத்தினர் கேட்டதற்குப் பதில் அளித்த திரு தர்மன், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் பணிகளைச் செய்யவிடாமல் தடுக்கும் பிரதமர் சிங்கப்பூரில் ஒருபோதும் இருந்ததில்லை.
எப்போதாவது அப்படி ஒரு நாள் வந்தால் அதைத் தடுக்க அதிபர், பதவியில் இருப்பார். இதுவே சிங்கப்பூரின் நிர்வாக முறை என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.
நேர்மை, ஊழலற்றத் தன்மையைப் பொறுத்தவரை அவை மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதை திரு தர்மன் வலியுறுத்திக் கூறினார்.
வேறு நாடுகளில் இப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால், சிங்கப்பூர் வேறுபட்டது. வேறுபட்ட ஒன்றாக அது இருக்க வேண்டி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது நம் மக்களிடையே தேர்ச்சிகளும் ஆற்றல்களும் பெருகி இருக்கின்றன. இருந்தாலும் முடிவில் எல்லாமே சிங்கப்பூர் நிர்வாக முறையைப் பொறுத்ததாகவே இருக்கும் என்றார் அவர். இதுவே சிங்கப்பூரை சிறப்பான நாடாக ஆக்குகிறது. சிங்கப்பூரைக் கண்டு உலகம் வியப்படைவதற்கு இதுவே காரணம் என்று திரு தர்மன் மேலும் குறிப்பிட்டார்.
ஆகையால், பின்னடைவு ஏற்படும் போதெல்லாம், அந்தப் பின்னடைவை, நிர்வாக முறையைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஒளிவுமறைவு இல்லாத தன்மையை முற்றிலும் மெய்ப்பிக்கவும் உரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாரவர்.
தன்னுடைய நண்பரும் நீண்டகால சகாவுமான திரு ஈஸ்வரன் இச்சூழ்நிலையைச் சமாளிப்பார் என்று தான் நம்புவதாகவும் திரு தர்மன் குறிப்பிட்டார்.
“இது அவரின் வாழ்வின் முடிவோ, எதிர்காலத்தின் முடிவோ அல்ல. இதை அவர் எதிர்கொள்வார். புலன்விசாரணை நடக்கட்டும். இப்போது நாம் எந்தக் கருத்தையும் கூறவேண்டாம்.
“நிர்வாக முறை அதன் கடமையைச் செய்கிறது. அது கடமையைச் செய்ய வேண்டும்,” என்றும் திரு தர்மன் குறிப்பிட்டார்.
சமூகக் கொள்கைகளுக்கான முன்னாள் ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன், கடந்த வெள்ளிக்கிழமை பொதுச்சேவையில் இருந்து விலகிக்கொண்டார். 40 ஆண்டு காலமாக அவர் பொதுச்சேவையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
பொருளியல் கொள்கைகளை உருவாக்குவதில் பழுத்த அனுபவம் கொண்டுள்ள திரு தர்மன், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தொண்டூழியர் சிறப்பிப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட இதர பல சமூக நிகழ்ச்சிகளிலும் சனிக்கிழமை கலந்துகொண்டார்.
இதனிடையே, திரு ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. அவர் பிணையின் பேரில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
அவருடைய கடப்பிதழ் முடக்கப்பட்டு இருக்கிறது. தான் கண்டறிந்த ஒரு விவகாரம் தொடர்பான புலன்விசாரணையில் திரு ஈஸ்வரன் உதவி வருவதாக கடந்த புதன்கிழமை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.
ஹோட்டல் புரோப்பர்டிஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் அந்த நிறுவனத்தைத் தோற்றுவித்தவருமான ஓங் பெங் செங் என்ற தொழிலதிபர் கைதான அதே நாளன்று திரு ஈஸ்வரனும் கைது செய்யப்பட்டார். திரு ஓங் பிணையில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
புலன்விசாரணை முடியும்வரை விடுப்பில் இருக்குமாறு திரு ஈஸ்வரனுக்குப் பிரதமர் லீ சியன் லூங் உத்தரவிட்டு இருக்கிறார்.
திரு ஈஸ்வரன், விடுப்பில் இருக்கையில் சிங்கப்பூரில் இருந்து வருவார் என்றும் அதிகாரபூர்வ வளங்களையும் அரசாங்கக் கட்டடங்களையும் எட்டுவதற்கு அவருக்கு எந்த வழியும் இருக்காது என்றும் வியாழக்கிழமை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இதனிடையே, தொழிலதிபர் திரு ஓங் வெளிநாட்டிற்குப் பயணம் செல்ல வேண்டுமென்று கேட்டு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அதன்தொடர்பில் அவருக்கான பிணைத் தொகை $100,000 ஆக அதிகரிக்கப்பட்டது என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியது.
நாடு திரும்பியதும் திரு ஓங் இந்தப் பிரிவிடம் முன்னிலையாக வேண்டும். கடப்பிதழை இந்தப் பிரிவிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

